அயல் பணி வரிச் சலுகை இரத்து:ஒபாமா அறிவிப்பு

Webdunia| Last Modified வியாழன், 9 செப்டம்பர் 2010 (13:33 IST)
இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளில் அலுவலங்களைத் திறந்து பணிகளை முடித்து (Profit on Out Sourcing) வருவாய் ஈட்டிவந்த நிறுவனங்களுக்கு அளித்துவரும் வரிச் சலுகைகளை இரத்து செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஒஹையோ மாநிலத்திலுள்ள கிளீவ்லாண்ட் நகரில் அமெரிக்கப் பொருளாதாரம் குறித்துப் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உள்நாட்டிலேயே உருவாக்கிடும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

“அமெரிக்காவில் முதலீடு செய்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்கவிப்பதே வரிச் சலுகை அளிப்பதன் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாகவே, அயல் நாட்டில் பணிகளை கொடுத்து இலாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கே வரிச் சலுகை அளித்து ஊக்குவித்து வந்திருக்கின்றோம். அதனை மாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்” என்று ஒபாமா கூறியுள்ளார்.
மெக்சிகோவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த ஆகும் செலவீனத்தை ஈடுகட்ட, அமெரிக்காவிற்கு வந்து பணி புரியும் தொழில் நெறிஞர்களுக்கு வழங்கப்படும் ஹெச் 1 பி, எல் 1 விசா கட்டணத்தை பன் மடங்கு உயர்த்திய ஒபாமா, இப்போது இந்தியாவிற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் அயல் பணி வாய்ப்புகளை குறைக்க வரிச் சலுகையில் கை வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :