வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia

டிப்ளமோ படிப்பை தேர்வு செய்யப் போகிறீர்களா?

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, தற்பபோது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. ஆனால் தற்போது எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவர்களுக்கும், அதனை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கும், பட்டயப் படிப்பை தேர்வு செய்யலாமா என ஆலோசித்து வருபவர்களுக்கும் இந்தக் கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதைய சூழலில் பட்டயப் படிப்புக்கு (டிப்ளமோ) உரிய அங்கீகாரம் கிடைத்தாலும் இனி வரும் காலங்களில் அதே மரியாதை அதற்கு கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே தெரிகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொறியியல் பிரிவில் பட்டயப்படிப்பில் சேர்ந்தவர்கள், அதனை வெற்றிகரமாக முடித்த பின்னர் உடனடியாக வேலைக்கு செல்லும் நிலை இருந்தது. ஆனால் இன்று பொறியியல் தொடர்பான பல்வேறு பணிகளுக்கு பொறியியல் பட்டதாரிகளையே நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன. இதனால் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு மறைமுகமாக பாதிக்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டே பட்டயப்படிப்பை முடிக்கும் பல மாணவர்கள் நேரடியாக பொறியியல் 2ஆம் ஆண்டில் (லேட்ரல் என்ட்ரி) சேர்ந்து பொறியியல் படிப்பை முடிக்க முயல்கின்றனர். அந்த மாணவர்களின் எதிர்கால நலனுக்கு இது உகந்தது என்பதில் ஐயமில்லை.

இதுஒருபுறம் இருக்க, நர்சிங் படிப்பில் உள்ள பட்டயப் படிப்புகள் அரசு நர்சிங் கல்லூரிகளுடனேயே நின்றுவிட்டன. தற்போது இந்தப் பிரிவில் பட்டயப்படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவிகள் அரசு பணிகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலை காணப்படுகிறது. ஆனால் பி.எஸ்சி., நர்ஸிங் பட்டப்படிப்பை முடித்தால் இந்தியாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் மட்டுமின்றி, அயல்நாடுகளில் உள்ள மருத்துவமனைகளிலும் கைநிறைய சம்பளம் தரும் நல்ல வேலைவாய்ப்பை பெற முடியும்.

இதுமட்டுமின்றி நர்ஸிங் துறையில் எம்.எஸ்சி மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்புகளை மேற்கொள்ளவும் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு உதவும் என்பது கூடுதல் அம்சம்.

‘ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி’ பிரிவில் பட்டயப்படிப்பு பயிலும் காலம் கூட மலையேறிவிட்டது என்றுதான் கூறவேண்டும். தற்போது இந்தப் பிரிவில் பட்டப்படிப்புகளுக்கே வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அயல்நாடுகளில் சென்று பிரபல நட்சத்திர ஓட்டல்களில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்புகளே உதவி புரிகின்றன. அந்த நாடுகளில் இருந்து கொண்டே அவர்கள் மேற்படிப்புகளையும் தொடர முடியும்.

ஒரு சில பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய பல்வேறு படிப்புகளில் பட்டப்படிப்புகள் துவங்கப்படுகின்றன. இதில் உதாரணமாக அனிமேஷன் படிப்பை பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தேர்வு செய்தால், அவர்களுக்கு அந்தப் படிப்புக்கான சட்டப்பூர்வ அங்கீகாரமாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டச் சான்றிதழ் வழங்கப்படும்.

அனிமேஷன் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் இணைந்து டிப்ளமோ படிப்பை முடித்தால் உடனடியாக வேலை கிடைக்கும். ஆனால், பணிக்குச் சென்ற பின்னர் குறைந்தபட்ச தகுதியாகக் கருதப்படும் இளநிலைப் பட்டம் கூட இல்லாததால் அவர்களுக்கான பல நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடுகின்றன.

தற்போதைய சூழலில் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு இருந்தாலும், அதற்குத் தகுதியான பணியாளர்கள் கிடைப்பதில்லை என்பதே நிறுவனத் தரப்பில் இருந்து கூறப்படும் பதிலாக உள்ளது. அதற்கு நியாயமான காரணமும் உள்ளது.

ஒரு சில துறைகளில் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால் மட்டுமே நல்ல சம்பளத்துடன் உயர் பதவிகளைப் பெற முடியும். பொதுவாக எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பட்டப்படிப்பை முடித்துவிட்டால், அதனைத் தொடர்ந்து முதுநிலை படிப்புக்கான தகுதியையும், திறமையையும் எளிதாகப் பெற்றுவிட முடியும். இதன்மூலம் எதிர்காலத்திலும் வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.