‌சிற‌ப்பு‌த் தே‌ர்வு : தேர்ச்சி பட்டியல் வெளியீடு

Webdunia| Last Modified வெள்ளி, 24 ஏப்ரல் 2009 (11:53 IST)
தற்காலிக அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடத்தப்பட்ட சிறப்பு தேர்வின் இறுதி பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தே‌ர்வு எழு‌தியவ‌ர்க‌ளி‌ல் 5,512 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இன்று முதல் தேர்ச்சி கடிதம் அனுப்பப்படும்.

கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்ட‌ம் நட‌த்‌தின‌ர். போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது அரசு ப‌ணிக‌ள் பா‌தி‌க்க‌‌ப்படாம‌ல் இரு‌க்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக அரசு ஊழியர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலும், மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு அரசு அலுவலகங்களிலும் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ‌திமுக தலைமை‌யிலான அரசு ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தது. தற்காலிக அரசு ஊழியர்களை பணி நிரந்தப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும், தற்காலிக பணியாளர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இ‌ந்த கோ‌ரி‌க்கைகளை ஏ‌ற்று, த‌ற்கா‌லிக ப‌ணியா‌ள‌ர்களு‌க்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் சிறப்பு தேர்வு நடத்தி அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து சிறப்பு தேர்வு நடத்தி 4,103 பேர் முதல்கட்டமாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புதேர்வு நடந்தது. தேர்வின் முடிவு வெளியிடப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. இறுதி பட்டியல் வெளியிட இருந்த நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது.
உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு நடந்து வந்த நிலையில், காலி இடங்களின் எண்ணிக்கை 5,587 ஆக உயர்த்தப்பட்டது. வழக்கு முடிவடைந்து இறுதி பட்டியல் தயாரிக்கும் பணியை டி.என்.பி.எஸ்.சி. தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், தேர்ச்சி பெற்றோர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

மொத்த காலி இடங்களில் 75 இடங்கள் காதுகேளாதோர் மற்றும் பார்வையில்லாதோருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவில் தகுதியான நபர்கள் கிடைக்காததால் எஞ்சியுள்ள 5,587 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு பெற்றோர் இறுதி பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (ட‌பி‌ள்யுட‌பி‌ள்யுட‌பி‌ள்யு.டிஎ‌ன்‌‌பிஎ‌ஸ்‌சி.‌ஜிஓ‌வி.இ‌ன்)பா‌ர்‌க்கலா‌ம்.
விண்ணப்பதாரர் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டால் போதும், எந்த மாவட்டத்தில்? எந்த துறையின் அலுவலகத்திற்கு அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் சிறப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண், அவரது விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு அதற்கான தெரிவுக்கடிதம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தபாலில் அனுப்பப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி ஒருவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :