விரிவுரையாளர் தே‌ர்வு‌க்கான தடை நீக்கம்

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:58 IST)
அரசு கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்ப 1,195 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுக்க விதிக்கப்பட்ட தடையை சென்னை உய‌ர்‌நீ‌‌திம‌ன்ற‌ம் ‌நீ‌க்‌கியு‌ள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் 1,195 புதிய விரிவுரையாளர்களை நியமிக்க தமிழக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவிப்பை வெளியிட்டது. ஆசிரியர்கள் தேர்வு வாரியம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. விண்ணப்பங்கள் பெற‌ப்ப‌ட்டன.

இந்த சூழ்நிலையில், செல்வகுமார் என்ற உடல் ஊனமுற்ற முதுநிலை பட்டதாரி ஒருவர் சென்னை உய‌ர்‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடர்ந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள காலியிடங்கள் இன்னும் 400 நிரப்பப்படவில்லை என்றும், அவற்றை நிரப்பாமல் புதிய விரிவுரையாளர்களை தேர்ந்தெடுக்கக்கூடாது என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம் என்றும், ஆனால், தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த தடையை நீக்க வேண்டும் என்று அரசு சார்பில் உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. 32 இடங்கள் மட்டுமே சீர்மரபினர் பிரிவில் காலியாக உள்ளது என்றும், இந்த காலியிடங்கள் புதிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அரசு அந்த மனுவில் பதில் கூறியிருந்தது.
இந்த தடையால் விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணி முடக்கப்பட்டுள்ளதால், விரிவுரையாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க முடியவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தது.

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இந்த வழக்கை விசாரித்தார். பொதுநல வழக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், சொந்த பிரச்சினைக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்தமாக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதேசமயம் மனுதாரர் வரலாற்றுத்துறையில் படித்திருப்பதால் அந்த துறையில் மட்டும் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படி நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரதான வழக்கு மீண்டும் வரும் 24-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :