மாணவர்களுக்கான பர்பிள்லீப் திறன்மேம்பாட்டுப் பயிற்சி

Webdunia| Last Modified வியாழன், 26 மார்ச் 2009 (12:41 IST)
எடுகேம்ப் குழுமத்தில் அடங்கிய பர்பிள்லீப் திறன் மேம்பாட்டு மையம், தமிழகத்தில் முன்னணி கல்லூரிகளில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளிக்க இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பர்பிள்லீப் மையங்களை நிறுவி அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பு முடித்து, வெளியே வரும்போது, மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடியாகப் பணிக்குச் செல்லும் தகுதியை அளிக்கிறது.

இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உடனடியாக வேலை வாய்ப்புகளையும் பர்பிள்லீப் பெற்றுத் தரும் என்று அந்த மையத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமீத் பன்சால் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தற்போது தமிழகத்தில் 3 பொறியியல் கல்லூரிகள் பர்பிள்லீப் மையத்துடன் கைகோர்த்திருப்பதாகவும், மேலும் பல கல்லூரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சென்னை தவிர, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களில் மாணவர்களின் பயிற்சிக்காக செயற்கைக்கோள் தொடர்புடன் கூடிய ஸ்டுடியோவை பர்பிள்லீப் அமைத்திருப்பதாகவும், இதன்மூலம், பல்வேறு துறைகளின் நிபுணர்கள் குறிப்பிட்டதொரு ஸ்டுடியோவில் இருந்து கொண்டே மாணவர்களுக்கு பயிற்சி தர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக மாணவர்கள் படிப்பை முடித்த பின், தங்களது துறை தொடர்பான பயிற்சியை மேற்கொள்வதற்கு சில ஆயிரங்களை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

அல்லது படிப்பை முடித்து வெளியே வரும் ஃப்ரஷ் பட்டதாரிகளை பணியமர்த்தும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சரிவால் அவர்களுக்கு வேலை தொடர்பான நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து, அவர்கள் வேலை செய்யத் தொடங்குவதற்கு 3 மாத காலம் ஆகி விடுகிறது.
ஆனால் பர்பிள்லீப் மையத்துடன் தொடர்பில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர் தேவையை உணர்ந்து, அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்தி, வேலைவாய்ப்புகளை தங்கள் மையம் உருவாக்கித் தரும் என்றும் அமீத் பன்சால் கூறினார்.

மாணவர்களிடம் இந்தப் பயிற்சிக்காக குறிப்பிட்டதொரு தொகை கட்டணமாகப் பெறப்படும் என்று கூறிய அவர், திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கல்லூரிகளின் பங்களிப்பைப் பொருத்து கட்டணம் வேறுபடும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :