மருத்துவ முதுகலை படிப்பு: 10% மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
இந்தியாவில் இளங்கலை மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்களில் 10% பேருக்கு மட்டுமே முதுகலை படிக்கும் வாய்ப்பு கிடைப்பதாக பெங்களூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு இருதய சிகிச்சை மருத்துவத்தில் 80 பேர் மட்டுமே தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. ஆனால் அமெரிக்காவில் ஆண்டுக்கு 800 பேர் இப்பிரிவில் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆகின்றனர்.

இதேபோல் நரம்பியல் மருத்துவத்தில் ஆண்டுதோறும் 60 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறும் நிலை இந்தியாவில் நிலவுகிறது. பொதுவாக மருத்துவ இளங்கலை படிப்பை முடிப்பவர்களில் 10% மாணவர்கள் மட்டுமே முதுகலை படிப்பை மேற்கொள்ள முடியும். அத்தனை இடங்கள் மட்டுமே இந்திய கல்வி நிறுவனங்களில் உள்ளன என்றார்.
மற்றொரு மூத்த மருத்துவர் பேசுகையில், மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கான இடங்களை அதிகாரிகளால் உடனடியாக அதிகரிக்க முடியாது. இதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததும் ஒரு காரணமாகும்.

ஆனால் தற்போது உள்ள சட்ட நடைமுறைகளை சிறிது மாற்றுவதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கு முடியும். உதாரணமாக அமெரிக்காவில் 80 வயதுள்ள மருத்துவர் கூட சட்டத்திற்கு உட்பட்டு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். இந்தியாவில் 60 வயதானவுடன் பேராசிரியர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு விடுகிறது.
எனவே ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க முடியும். இதனால் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களையும் அதிகரிக்க முடியும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :