பா‌ர்வைய‌ற்றவ‌ர்களு‌க்கு கூடுதலாக ஒரு ம‌ணி நேர‌ம்

Webdunia| Last Modified வியாழன், 26 மார்ச் 2009 (11:44 IST)
அனைத்து மையங்களிலும் பொது தேர்வு எழுதும் கண் பார்வையற்ற மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் என்று சென்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பு அறக்கட்டளை செயலாளர் சிம்மசந்திரன் சென்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு 29.9.1993-ல் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்த உத்தரவுப்படி பொது தேர்வு எழுதும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த சலுகையை 16 ஆண்டுகளாக உடல் ஊனமுற்றோர்கள் அனுபவித்து வந்தார்கள்.
ஆனால் கடந்த 13-ந் தேதி அரசு தேர்வு இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். 93-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்கனவே உள்ள மையங்களில் உள்ள பார்வையற்ற மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கையானது சமவாய்ப்புக்கு எதிராக உள்ளது. கண்பார்வையற்றவர்கள் இந்த சுற்றறிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு, வங்கிகள் கண்பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக நேரத்தை ஒதுக்கி வருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் பார்வையற்றோர் ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு `பிரெய்லி' மூலம் தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்விலும் கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆகவே, கடந்த 13-ந் தேதி அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து தேர்வு மையங்களிலும் பொது தேர்வு எழுதும் கண் பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் எ‌‌ன்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் நேற்று விசாரித்தனர். குறிப்பிட்ட தேர்வு மையங்கள் என்று இல்லாமல், அனைத்து மையங்களிலும் தேர்வு எழுதும் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரெய்லி முறையில் பொதுத்தேர்வு எழுதினாலும், உதவியாளரை வைத்து தேர்வு எழுதினாலும் பார்வையற்ற மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :