கிறித்தவ, முஸ்லீம் தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

Webdunia|
FILE
கிறித்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அந்தப் பிரிவின் கீழ் அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்லாமா? கூடாதா? என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

கிறித்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களையும், இந்து, பெளத்த, சீக்கிய மதங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கான பட்டியலில் சேர்த்து அவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை கல்வி, வேலை வாய்ப்பில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு நியமித்த, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்தது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பொது நல மனுக்களுக்கான மையம், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத அடிப்படையில் பாரபட்சத்துடன் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், சமூக, பொருளாதார அடிப்படைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், சுதந்திரக் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது நல வழக்கு மையத்தின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் பிராசாந்த் பூஷண், “இந்து, சீக்கிய, பெளத்த தலித் மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு உண்டு, ஆனால், கிறித்தவ, இஸ்லமிய மதங்களில் உள்ள தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு பெற தகுதியற்றவர்கள் என்பது சரியாகுமா? இவ்வாறு செய்வது மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது என்கிற அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கு புறம்பானது ஆகாதா? என்று வினா எழுப்பினார்.


இதில் மேலும் படிக்கவும் :