வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2014 (18:29 IST)

மோடி பொதுக்கூட்ட கட்டண வசூலுக்கு சேவை வரி விதிக்க எதிர்ப்பு; நோட்டீசை வாபஸ் பெற்றது கலால் வரித்துறை

நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்களுக்கு வசூலிக்கப்படும் நுழைவு கட்டண தொகைக்கு சேவை வரி விதிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பாரதீய ஜனதாவுக்கு அனுப்பிய நோட்டீசை மத்திய கலால் வரித்துறை வாபஸ் பெற்றது.

பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அவரது பொதுக்கூட்டங்களுக்கு வரும் தொண்டர்களிடம் அக்கட்சியின் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டண வசூலுக்கு சேவை வரி விதிக்க மத்திய அரசு தீர்மானித்தது.

இது தொடர்பாக நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய கலால் வரி புலனாய்வு இயக்குனரகத்தின் லூதியானா பிரிவின் மூத்த அதிகாரி ராஜேஷ் கே அரோரா, சண்டிகார் நகர பாரதீய ஜனதா கட்சிக்கு கடந்த 12-ந்தேதி ஒரு நோட்டீசு அனுப்பி இருந்தார்.

அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

சண்டிகார் பிராந்தியத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு பல இடங்களில் நரேந்திர மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. இந்த கூட்டங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
FILE

இதுபோன்று டிக்கெட் கட்டணம் வசூலிப்பது சேவைவரிக்கு உட்பட்டது ஆகும். மத்திய கலால் வரி சட்டத்தின் 14-வது பிரிவின்படி, இதுபோன்று கட்டணம் வசூலிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து அதுபற்றிய விவரங்களை கேட்டு அறிவதற்கும், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்வதற்கும் கலால் வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

எனவே நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்களுக்கு எவ்வளவு தொகை நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டது? அதற்கு சேவை வரி செலுத்தப்பட்டதா? என்பன போன்ற விவரங்களை 10 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் இமாசலபிரதேசம், காஷ்மீர், பஞ்சாப் மாநில பாரதீய ஜனதா கட்சிக்கும் நோட்டீசுகள் அனுப்பப்பட்டு இருந்தன.

இதற்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி தனது வலைத்தள பக்கத்தில் எழுதி இருந்ததாவது:-

தேர்தலுக்காக பாரதீய ஜனதா கட்சி நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளது. பொதுக்கூட்டங்களிலும் மற்ற இடங்களிலும் தொண்டர்களிடம் நிதி வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 10 கோடி இல்லங்களுக்கு சென்று நிதி திரட்ட திட்டமிட்டு இருக்கிறோம். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரசார கூட்டங்களில் டிக்கெட் எதுவும் விற்கப்படுவது இல்லை.

மோடிக்கு மக்களிடம் பெருகி வரும் செல்வாக்கை சமாளிக்க முடியாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இப்படி ஒரு புதிய முறையை கண்டுபிடித்து உள்ளது. அவரது பொதுக்கூட்டங்களில் கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்து அந்த கூட்டங்களுக்கு வரி விதிக்க திட்டமிடுவது அசட்டுத்தனமாக உள்ளது.

இதுபோன்ற ஒரு கடிதம் பாரதீய ஜனதாவுக்கு மட்டும்தான் எழுதப்பட்டு உள்ளதா? அல்லது காங்கிரஸ் போன்ற பிற கட்சிகளுக்கும் எழுதப்பட்டு உள்ளதா? என்பதை அறிய விரும்புகிறோம். இவ்வாறு அவர் எழுதி இருந்தார்.

பாரதீய ஜனதா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த கட்சிக்கு அனுப்பிய நோட்டீசுகளை மத்திய கலால் வரி புலனாய்வு இயக்குனரகம் நேற்று திடீரென்று வாபஸ் பெற்றுக்கொண்டது. ‘‘நாங்கள் அனுப்பிய நோட்டீசு தொடர்பாக தங்கள் தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்க தேவை இல்லை’’ என்று அந்த இயக்குனரகம் கூறி உள்ளது.