வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia

மீண்டும் பிரதமராக விருப்பம் இல்லை; ஜெயலலிதா பிரதமராக முழு ஆதரவு அளிப்பேன் - தேவேகவுடா பேட்டி

மீண்டும் பிரதமராக வர விரும்பவில்லை என்றும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு முழு ஆதரவு அளிப்பேன் என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினர்.
FILE

மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில் நேற்று கோவை வந்தார். கோவையில் அவருக்கு மதசார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவையில் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், அதற்கு முன்பு 6 ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியும் ஆட்சி செய்தன. ஆனால் நாட்டு மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கஷ்டநிலையிலேயே உள்ளன.

இப்போது அடுத்த தேர்தலுக்காக தேசிய கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இரு கட்சிகளும் தலைவர்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகின்றன. தலைவர்களை முன்னிறுத்தினால் மட்டும் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது. நாட்டில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர். இந்த 2 கட்சிகள் ஆட்சி செய்தபோதும் மக்களுக்கு என்ன சாதிக்க முடிந்தது?.

பிரதமராக நான் மற்றும் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், வி.பி.சிங் போன்றவர்களும் பதவி வகித்தோம். குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்து பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டோம். மக்கள் நிலையான ஆட்சியையும், சிறப்பான ஆட்சியையும் எதிர்பார்க்கிறார்கள்.

மத்தியில் ஆட்சி அமைக்க மாநில கட்சிகளின் பங்களிப்பு பல ஆண்டுகளாக உள்ளது. வாஜ்பாய், நரசிம்மராவ், இப்போதுள்ள பிரதமர் உள்பட பலரும் மாநில கட்சிகளின் கூட்டணியுடன் தான் ஆட்சி செய்தனர். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் மாநில கட்சிகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். மாநில கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்க தேசிய கட்சிகள் வழிவிட வேண்டும்.

தேசிய கட்சிகள் பொறுமையாக இருந்தால் மாநில கட்சிகள் மத்தியில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி அமைக்க முடியும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் நான் ஈடுபடுவேன். ஆனால் நான் பிரதமர் பதவி வகிக்க விரும்பவில்லை. மாநில கட்சி தலைவர்கள் பிரதமர் ஆவதற்கு முழு உதவி செய்வேன்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், பிரகாஷ் காரத்தும் சந்தித்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்துள்ளனர். தேர்தலுக்கு பின்னரே பிரதமரை முடிவு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்திருப்பதை பத்திரிகை மூலம் அறிந்துகொண்டேன். இதனையே நானும் ஆதரிக்கிறேன்.

தமிழ்நாட்டில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெற்று, பிரதமராக அவர் பதவி ஏற்க எனது முழு ஆதரவை அளிப்பேன். முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோர் பிரதமர் பதவி ஏற்றாலும் ஆதரவு அளிப்பேன். பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாத மாநில கட்சிகளுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க நான் உதவுவேன். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.