1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia

நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது - தேர்தல் ஆணையம்

தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
FILE

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் குறித்து சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பாக, சில கட்டுப்பாடுகளை விதித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் கே.அஜய் குமார் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு இலவசங்கள் வழங்குவது குறித்து சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி வழங்கிய தீர்ப்பில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வழங்குவதாக அறிவிப்பது குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.

தேர்தல் அறிக்கைகளில் கூறப்படும் வாக்குறுதிகள் ஊழல் நடவடிக்கைகளுக்கு உதவுவதாக கருத முடியாது என்ற போதிலும், இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பது, வாக்காளர்களை கவர உதவும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. இது தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் ஆணிவேரையே அசைப்பது போல் அமைந்து விடும் என்றும் தெரிவித்து இருக்கிறது.


உச்சநீதிமன்றம் தெரிவித்த இந்த கருத்துகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்க்கப்பட்டு உள்ளன.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளிக்கக்கூடாது. நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றி மாநில அரசு, மக்களுக்கு தெரிவிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் அரசியல் சட்டத்தின் கொள்கைகளுக்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு விரோதமாகவும் இருக்கக்கூடாது.

தேர்தலை நியாயமாக நடத்தும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு முரணாகவும், வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தும் வகையிலான வாக்குறுதிகளையும் அளிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

சமீபத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் போது, இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சில கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அறிக்கைகளில் இதுபோன்ற வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு அளிப்பது தங்களுக்கு உள்ள உரிமை என்றும், அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உதவும் என்றும் கூறினார்கள்.

அது ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துதான் என்ற போதிலும், அளிக்கப்படும் வாக்குறுதிகள் வேட்பாளர்களிடம் பாரபட்சமில்லாத நிலையை ஏற்படுத்துவதற்கும், தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தும் தேர்தல் கமிஷனின் நோக்கத்துக்கும் விரோதமாக அமைந்துவிடக்கூடாது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.