1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (17:53 IST)

பாஜக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் - பாமக வெளியேற முடிவு?

சேலம், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர்களை வாபஸ் பெற முடியாது என்று பாமக பிடிவாதமாக இருப்பதால், பாஜக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இன்றிரவுக்குள் பிரச்சனை முடிவுக்கு வராவிட்டால், கூட்டணியிலிருந்து பாமக வெளியேறும் என தெரிகிறது.
 
FILE

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றன. இக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பாஜக குழு பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கூட்டணி உடைந்து விட்டது என்று கூறும் அளவுக்கு, தேமுதிகவும், பாமகவும் தன்னிச்சையாக வேட்பாளர்களையும் அறிவித்தன.

இதன்பின்பும், பாஜக மாநில நிர்வாகிகள் விடா முயற்சியுடன் இரு கட்சியினரிடமும் சமரசம் பேசினர். நேற்று முன்தினம் இரவில், திடீரென பாஜக தரப்பில் தொகுதி பங்கீட்டு சிக்கல் தீர்ந்து விட்டதாகவும் விரைவில் தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வரும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், கூட்டணியில் நேற்று மீண்டும் பிரச்சனை வெடித்தது. தேமுதிக, பாமக கட்சிகள் சில தொகுதிகளை விட்டு தர முடியாதென பிடிவாதம் செய்தன. தேமுதிகவுக்கு திருவண்ணாமலை, சேலம் உள்பட 14 தொகுதிகளும், பாமகவுக்கு தர்மபுரி, அரக்கோணம், ஆரணி, சிதம்பரம்(தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம்(தனி), கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய 8 தொகுதிகளும் ஒதுக்குவதாக முடிவெடுத்தனர். இதையடுத்து, திருவண்ணாமலை, சேலம் தொகுதிகளை தங்களுக்கே தர வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளிடம் பாமகவினர் கோரினர். சேலம் தொகுதியில் சுதீஷ் போட்டியிட உள்ளதால், அந்த தொகுதி தங்களுக்கே வேண்டும் என்று விஜயகாந்தும் பிடிவாதம் பிடித்தார்.

இதற்கிடையே தர்மபுரியில் அன்புமணியை வேட்பாளர் என்று அறிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சேலத்தில் அருள்தான் வேட்பாளர், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக கூறினார். இதையடுத்து, சேலத்தில் தேமுதிக வேட்பாளராக சுதீசை அறிவிக்கவிருந்த விஜயகாந்த், கடைசியில் வேட்பாளரை அறிவிக்காமல் விட்டுவிட்டார். இந்த சூழ்நிலையில், பாமகவினரிடம் இன்று காலை பாஜக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பிற்பகல் வரை எந்த முடிவும் ஏற்படவில்லை.

பாமக தலைவர்கள் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில் பாஜக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால், எந்தெந்த தொகுதிகளில் தனித்து போட்டியிடலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே, கொங்கு மக்கள் கட்சிக்கு கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 தொகுதிகளில் 2 தொகுதிகள் தருவதாக பாஜக நிர்வாகிகள் ஆரம்பத்தில் கூறியுள்ளனர்.

அதில் ஈரோட்டை மதிமுகவுக்கு ராஜ்நாத் சிங்கே ஒதுக்கி விட்டார். கோவையில் பாஜக நிற்கிறது. திருப்பூர் தொகுதியை தேமுதிக கேட்கிறது என்று கூறி, பாஜக வைத்து கொண்டது. இதனால், கொங்கு மக்கள் தேசிய கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. செல்வாக்கு இல்லாத தொகுதியில் போட்டியிட்டு தோற்பதை விட, செல்வாக்கு உள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து தனித்து போட்டியிடலாம் என அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

பாமக போட்டியிடும் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் கொங்கு மக்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளதால் அக்கட்சியுடன் பாமக பேசி வருகிறது. எனவே, பாஜக கூட்டணியில் பாமக, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இருக்குமா அல்லது வெளியேறி தனி கூட்டணி அமைக்குமா என்பது இன்று மாலை அல்லது நாளை காலை தெரிந்துவிடும்.

பாஜக தேசிய செயலாளரும், தமிழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமான முரளிதர ராவ் சென்னை வந்துள்ளார். அவர் இன்று காலை பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர்கள் ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பிறகு முரளிதர ராவ் அளித்த பேட்டி:-
தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் முரண்பாடோ, குழப்பங்களோ, பகை உணர்வோ எதுவும் இல்லை.
FILE

கூட்டணியில் 99.5 சதவீதம் பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளது. தற்போது, சிறு சிறு பிரச்சனைகள் மட்டுமே உள்ளது. அவையும் சுமுகமாக முடியும். கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்று தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஓரிரு தொகுதிகளில் தேமுதிக, பாமகவுக்கு கணிசமாக வாக்குவங்கி உள்ளது. இதுதான் பிரச்சனைக்கு காரணம். இது தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்படும். தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை சென்னைக்கு அழைத்திருந்தோம். நாளை மறுநாள் டெல்லியில் பாஜக தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. எனவே ராஜ்நாத் சிங், சென்னைக்கு வரும் தேதி நாளைதான் முடிவாகும்.

இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.