மூன்றாண்டு B.L., (Hons) படிப்பில் B.A., B.Com., பட்டதாரிகளை சேர்க்க திட்டம்

சென்னை| Webdunia| Last Modified திங்கள், 15 ஜூன் 2009 (18:18 IST)
மூன்றாண்டு கால பி.எல். (ஹானர்ஸ்) படிப்பில் பி.ஏ. மற்றும் பி.காம். பட்டம் பெற்றவர்களையும் சேர்க்க சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு 5 ஆண்டு, 3 ஆண்டு சட்டப் படிப்புகள் உள்ளன. இதுதவிர, சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு பி.எல்.(ஹானர்ஸ்) படிப்பும் உள்ளது.
ஐந்தாண்டு சட்டப் படிப்புகளில் மொத்தம் 1,050 இடங்களும், ஹானர்ஸ் படிப்பில் 80 இடங்களும் உள்ளன. இவற்றில் 2009-2010ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அந்தந்த சட்டக் கல்லூரிகளில் கடந்த 1ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களைப் பெறவும், அவற்றைப் பூர்த்தி செய்து அளிக்கவும் ஜூன் 15ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் கடைசி தேதியை ஜூன் 25 வரை நீட்டித்து சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்தாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சட்டப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 2009-2010ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப்படிப்பில் சேருவதற்கு அதிகபட்ச தகுதி வயது எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 35 ஆகவும், மற்ற பிரிவினருக்கு 30 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இப்படிப்புக்கு ரூ.50 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் பாதிக்கு மேல் சலுகை அளிக்கப்படுகிறது.

மூன்றாண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்பில் கடந்தாண்டு அறிவியல் (பி.எஸ்சி.,), மருத்துவம், பொறியியல் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். அதனால் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் சேர்ந்தனர்.
எனவே, இந்தப் படிப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த சட்டப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளில் சேருவதற்கும், சட்டப் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் படிப்புகளில் சேருவதற்குமான விண்ணப்ப வினியோகம் பற்றிய அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
ஐந்தாண்டு பி.எல்.,(ஹானர்ஸ்) படிப்பில் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கான விண்ணப்பம் ஜூலை 3ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :