யு.எஸ். பல்கலையின் போலி விசா மோசடி: 1,500 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்

Webdunia|
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஒரு பல்கலை அளித்த மோசடி விசாவைப் பெற்றுக்கொண்டு, அங்கு சென்று பணியாற்றிக்கொண்டே படித்துக்கொண்டிருந்த 1,500க்கும் அதிகமான இந்திய (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) மாணவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஃப் -1 விசா என்றழைக்கப்படும் கல்விக்கான விசாவை பல இலட்சம் லஞ்சம் கொடுத்து இந்த மாணவர்கள் பெற்று கலிஃபோர்னிய மாகாணத்தின் தலைநகரான சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலுள்ள டிரை-வாலி பல்கலையில் படிக்கச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வு துறையினர் (Immigration and Customs Enforcement - ICE) நடத்திய விசாரணையில், டிரை-வாலி பல்கலையில் படிக்க வந்துள்ள 1,550 இந்திய மாணவர்களின் விசாக்கள் போலியானவை என்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவுத் துறை பேச்சாளர் பி.ஜே.குரோலி கூறியுள்ளார்.
அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்ற புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையில், எஃப் -1 போலி விசாக்களை இந்திய மாணவர்கள் பெறுவதற்கு டிரை-வாலி பல்கலையே உதவியுள்ளது தெரியவந்துள்ளது என்றும், இந்த விசாவைப் பெறுவதற்கும், அதோடு, வெளியில் பணியாற்றுவதற்கான அனுமதியை (Work Permit) இந்திய மாணவர்கள் பெரும் பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
“2001 செப்டம்பர் 11 தாக்குதலிற்குப் பிறகு படிக்க வரும் மாணவர்கள் பெற்றுவரும் விசாக்களை பற்றிய தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர் விசாவில் நீங்கள் வருவதாக இருந்தால், முதலில் அதனை முழுமையாக பரிசோதித்துக் கொண்டு இங்கு படிக்க வர வேண்டும். அது அமெரிக்கா வழங்கும் கல்வித் திட்டத்தின் முக்கிய நிபந்தனையாகும்” என்று குரோலி கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு மோசடி விசா வழங்கியும், அவர்கள் பணி அனுமதி பெறவும் உதவிய டிரை-வாலி பல்கலை இழுத்து மூடப்பட்டுள்ளது. அந்தப் பல்கலையில் படித்துவரும் 1,555 மாணவர்களில் 95 விழுக்காட்டினர் இந்திய (ஆந்திர) மாணவர்களே. இவர்களிடம், விசா பெற்றது, பணத்தை தவறாக தங்கள் நாட்டிலிருந்து பெற்றது (Money laundering), விசாவை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாற்றுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆன்-லைனிலும், வீட்டிலிருந்தே படிக்கும் மாணவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களும் மேரிலாண்ட், பென்சில்வனியா, டெக்ஸாஸ், சான் ஃபிரான்சிஸ்கோ, விர்ஜீனியா ஆகிய இடங்களில் பணியாற்றிக் கொண்டே படித்துக் கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ள சுங்க மற்றும் குடியேற்றத் துறையினர், பல்கலையில் அன்றாட (Days Scholar) மாணவராக படித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே பணி அனுமதி (Work Permit) பெற்று பணியாற்றி முடியும் என்றும், மாணவர்கள் குடியேற்ற நிலை பெறுவதற்கு, அவர்கள் பல்கலைக்குச் சென்று அன்றாடம் படித்து வருபவர்களாகவும், அதனை முடிக்கக் கூடிய அளவிற்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தற்போது இழுத்து மூடப்பட்டுள்ள டிரை-வாலி பல்கலை, அவர்கள் கலிஃபோர்னியாவில் தங்கிப் படிப்பவர்கள் அல்ல என்பதை மறைக்க, அவர்களுக்கு முகவரியைத் தந்து உதவியுள்ளது என்றும் அத்துறையினர் கூறியுள்ளனர்.

தவறாக வழி நடத்தப்பட்டு, போலியான விசா பெறறுச் சென்று, தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பலரும் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளனர்.
இந்த விவரத்தை அறிந்த ஆந்திரத்திலிருந்து இந்த பல்கலைக்கு படிக்க திட்டமிட்டுருந்த பல மாணவர்கள் தங்கள் பயணத்தை இரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :