மெட்ரிக் தேர்வுகளை மண்டல தேர்வுத்துறை நடத்த ஏற்பாடு

மதுரை| Webdunia| Last Modified வியாழன், 23 ஜூலை 2009 (18:34 IST)
தேர்வுத் துறையின் மண்டல அலுவலங்களே மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு தேர்வுகள் துறை சார்பில் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் 10ஆம் வகுப்பு வினாத்தாளை அச்சிட்டு வழங்குவது, தேர்வுத் துறையின் சென்னை இயக்குனர் அலுவலகப் பணியாக இருந்து வருகிறது.

மீதமுள்ள பணிகளை சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை போன்ற இடங்களில் உள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் செய்து வருகின்றன.
ஆனால், தற்போதைய சூழலில் இயக்குனர் அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லாத காரணத்தால், மெட்ரிக்குலேஷன் தேர்வுக்கான வினாத்தாள் அச்சிடும் பணியையும் மண்டல அலுவலகங்களிடமே விட்டுவிட இயக்குனரகம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், மண்டல இயக்குனர்கள் இடையே நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் கருத்துரு, தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் அக்டோபர் மாதம் முதல் மெட்ரிக்குலேஷன் தேர்வுகளின் நடைமுறை செயல்பாடுகளை அந்தந்த மண்டல அலுவலகங்களே மேற்கொள்ளும் என தமிழக அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :