மாதிரி கல்லூரிகள் அமைக்க நிதிப் பங்களிப்பு: மாநில அரசுகள் சம்மதம்

புதுடெல்லி| Webdunia| Last Modified திங்கள், 21 செப்டம்பர் 2009 (15:59 IST)
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரி கல்லூரிகளை அமைக்கும் திட்டத்துக்கு தங்கள் பங்கு நிதியை அளிக்க பெரும்பாலான மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளதால் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்த வழி ஏற்பட்டுள்ளதாக யூஜிசி செயலர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 374 மாதிரி கல்லூரிகளை அமைப்பதற்கான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அறிவித்தார். ஆனால் இந்தக் கல்லூரிகளை அமைப்பதற்குத் தேவைப்படும் நிதியில் மாநில அரசுகளும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், பெரும்பாலான மாநில அரசுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் பல்கலைக் கழக மானியக் குழு (யூஜிசி) மாநில கல்வித் துறை செயலர்களுடன் கடந்த 19ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மாதிரி கல்லூரிகளைத் துவக்கும் திட்டத்துக்காக தங்கள் பங்களிப்பை அளிக்க பெரும்பாலான மாநில அரசுகள் ஒப்புக் கொண்டன. ஒரு சில மாநில அரசுகள் மட்டும் ஆலோசனைக்குப் பிறகு கருத்துத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளன.
மாதிரி கல்லூரிகளைத் துவக்குவதற்கான விரிவான நெறிமுறைகளை யூஜிசி தயாரித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு கல்லூரியும் ரூ.8 கோடியில் அமைக்கப்படும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2.67 கோடி. மாநில அரசுகளின் பங்கு ரூ.5.33 கோடி. ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் மத்திய, மாநில அரசுகளின் பங்கு சரிவிகிதத்தில் இருக்கும்.
தவிர, சம்பளம், பராமரிப்பு போன்ற செலவினங்களுக்கான தொகையை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வருடத்துக்கு இது சுமார் ரூ.1.5 கோடியாக இருக்கும். இத்திட்டம் தொடர்பாக யூஜிசி மற்றும் மாநில அரசுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும். புதிதாக அமைக்கப்படும் மாதிரி கல்லுரிகளில் அனைத்துவிதமான நவீன வசதிகளும் இருக்கும். அவை தன்னாட்சிக் கல்லூரிகளாகச் செயல்படும். செமஸ்டர் பாடத் திட்ட முறையை செயல்படுத்தும்.
முதல் கட்டமாக 200 மாவட்டங்களில் மாதிரி கல்லூரிகள் அமைக்கப்படும். 11-வது திட்ட காலத்திற்குள் 200 கல்லூரிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வரும் பரிந்துரைகளை ஆராய்வதற்காக யூஜிசி தலைவர் பேராசிரியர் சுகாதியோ தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரு சில மாநில அரசுகள் தங்களது கருத்துருக்களை சமர்ப்பித்துள்ளன. அவை யூஜிசி வகுத்துள்ள நெறிமுறைகளின்படி இல்லாததால் மீண்டும் புதிய கருத்துருக்களை சமர்ப்பிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :