மாணவிகள் துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கல்லூரிக்கு வரலாம்: உயர்நீதிமன்றம்

சென்னை| Webdunia| Last Modified புதன், 1 ஜூலை 2009 (13:21 IST)
மாணவிகள் சேலை அணிந்து கல்லூரிக்கு வரவேண்டும் என நிர்வாக வலியுறுத்தியதை எதிர்த்து கல்லூரி மாணவி தொடர்ந்த வழக்கில், மாணவிகள் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து கல்லூரிக்கு வரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், மாணவிகள் சேலை கட்டிக் கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்த முடியாது. அதேபோல் சுடிதார் அணியக் கூடாது என தடுக்கவும் முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை போரூரில் உள்ள வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பயிலும் ஹவுஸ் சர்ஜன் மாணவிகள் சுடிதார் அணியக் கூடாது; சேலைதான் அணிந்து வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாணவி கமலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், மாணவிகள் சேலை கட்டிக் கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்ற கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். கமலம் சார்பில் வழக்கறிஞர் அருள்மொழி வாதாடினார்.
மாணவிகளின் ஒட்டுமொத்த கவனத்தை மட்டுமல்லாது, பெற்றோரின் கவனத்தையும் ஈர்த்த இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வெங்கட்ராமன் நேற்று வழங்கினார்.

அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் முன்பெல்லாம் முழு நீள பாவாடை-தாவணி சீருடையாக இருக்கும். இந்த உடை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டது. ஆனால் இப்போது பெரும்பாலான பள்ளிகளில் சுடிதார், சல்வார் கமிஸ் ஆகிய உடைகளை அனுமதிக்கிறார்கள். பல பள்ளிகளில் இதை சீருடையாகவே மாற்றி விட்டனர். மேலும் கல்லூரி அளவிலும் இத்தகைய உடைகள் நாகரிகமான உடையாக கருதப்படுகிறது. இதை அநாகரீகமாக கருத முடியாது.
நமது நீதிமன்றத்தின் பெண் உதவியாளர்கள் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், சல்வார் கமிஸ் ஆகிய உடைகளை அணிய, உயர்நீதிமன்றத்தின் நிர்வாக குழு அனுமதித்துள்ளது.

மாணவிகள் சேலைதான் அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எந்த விதிமுறையையும் உருவாக்கவில்லை. விதிமுறை ஏதேனும் இல்லாதபட்சத்தில் சேலைகட்டித்தான் கல்லூரிக்கு வரவேண்டும் என்று கூற முடியாது.
துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரும், சல்வார் கமீஸ் உள்ளிட்ட ஆடைகளை கண்ணியமற்ற உடை என்று யாரும் கருதவில்லை. இந்த உடைகள் உடம்பு முழுவதையும் மறைக்கும். இப்படிப்பட்ட உடைகளை அணியக்கூடாது என்று கல்லூரி கூறுவதை அனுமதிக்க முடியாது.

ஆகவே, மாணவி தனது பயிற்சி காலம் முழுவதும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், சல்வார் கமிஸ் ஆடைகளை அணிந்து செல்லலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தீர்ப்பளித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :