பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வு: 60,000 மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை| Webdunia|
ஜூலை 6ஆம் தேதி துவங்கும் பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 60 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களின் ரேங்க் பட்டியல் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று காலை வெளியிடப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி பட்டியலை வெளியிட்டார். இதில் 43 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
ரேங்க் பட்டியலை வெளியிட்ட பிறகு அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 6ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, ஜுலை 9ஆம் தேதி முதல் பொது கலந்தாய்வு துவங்குகிறது. இதில் முதல் நாளில், உடல் ஊனமுற்றோர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். பின்னர் மற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும்.
முதல் நாள் 200 முதல் 199 வரை கட்-ஆஃப் பெற்ற 2 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வார்கள். தினமும் காலை7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கலந்தாய்வு நடக்கும். ஜுலை 29ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைகிறது.

தினமும் 3,200 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். சுமார் ஒருமாத காலம் நடைபெறும் முதற்கட்ட கலந்தாய்வில் 60 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள். இரண்டாம் கட்ட கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.
பொறியியல் ரேங்க் பட்டியல் தொடர்பான விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (annauniv.edu/tnea2009/rank.html) மாணவர்கள் பார்க்க முடியும்.
இதில் மேலும் படிக்கவும் :