பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணித் திறன் பயிற்சி: நாஸ்காம் – விப்ரோ கூட்டு முயற்சி

Webdunia|
தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் பட்டதாரிகளுக்கு பணித் திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நாஸ்காம் அமைப்பும், விப்ரோ நிறுவனத்தின் மிஸ்ஸன் 10x அறக்கட்டளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

‘தகவல் தொழில்நுட்பத் துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி’ என்ற பெயரில், ஐ.டி. பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படும் என்றும், இதில் அடிப்படை திறன் மேம்பாடு (Foundation skills in IT) பயிற்சி பெறும் பட்டதாரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைக்கு ஏற்றவாறு பயிற்றுவிக்கப்படுவார்கள் என்று விப்ரோ நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் பிரதிக் குமாரும், நாஸ்காம் அமைப்பின் தலைவர் சோம் மிட்டலும் கூறியுள்ளனர்.
பெங்களூருவில் இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
விப்ரோ அறக்கட்டளையால் பயிற்றுவிக்கப்படும் பொறியியல் பட்டதாரிகள், நாஸ்காமின் திறன் தொழில்நுட்ப தேர்வில் மதிப்பீடு செய்யப்படுவார்கள் என்று பிரதிக் குமார் கூறியுள்ளார்.

நமது நாட்டிலுள்ள 3,000 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5,50,000 பொறியியல் பட்டதாரிகள் வருகிறார்கள். ஆனால் தொழிலகங்களின் தேவைக்கும் இவர்களின் திறனிற்கும் இடையே பெருத்த இடைவெளி உள்ளதால், மனித வளம் இருந்தும் போதாமை நிலவுகிறது என்றும், அந்த இடைவெளியை திறன் மேம்பாட்டின் மூலம் நிறைவு செய்வதே இப்பயிற்சித் திட்டத்தின் நோக்கம் என்று கூறியுள்ளனர்.
“ஒவ்வொரு தொழிலகமும் தங்கள் பணியாளர்களின் திறன் மேம்பாட்டை உயர்த்த பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆயினும், பணியாளர்களின் திறனை சரியான வகையில் உயர்த்த பல்வேறு அரசுத் துறைகளுடனும், கல்லூரிகளுடனும், த.தொ. நிறுவனங்களிடமும் ஒன்றுபட்டு செயலாற்றி, அதற்கான உரிய பயிற்சியை அளிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று சோம் மிட்டல் கூறியுள்ளார்.
2007ஆம் ஆண்டு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட மிஸ்ஸன் 10x அறக்கட்டளை இதுவரை 13,000த்திற்கும் அதிகமான பட்டதாரிகளை பயிற்றுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :