பொறியியல் கலந்தாய்வு நிறைவு: 30,119 இடங்கள் காலி

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (12:36 IST)
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான் பொறியியல் மாணவர் சேர்க்கை நேற்று நிறைவு பெற்றது.

நடப்பு (2009-10) கல்வி ஆண்டில் 83 ஆயிரத்து 552 மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதையடுத்து 30 ஆயிரத்து 199 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன.

2009-10ஆம் ஆண்டில் அகடமி பொதுப்பிரிவில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 874 இடங்கள் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 102 பொறியியல் இடங்கள் இருந்தன. இவற்றில் சேர ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 708 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவற்றி ஒரு லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
அகடமி பிரிவில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 40 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

அகடமி பிரிவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரத்து 715 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 291 இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் 69 ஆயிரத்து 669 இடங்கள் என மொத்தம் 79 ஆயிரத்து 675 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதுதவிர விளையாட்டில் 99 இடங்கள், தொழிற்பிரிவில், 3,482 இடங்கள், பிற மாநிலங்கள் பிரிவில் 45 இடங்கள் என மொத்தம் 83 ஆயிரத்து 552 இடங்களில் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. ஆனால் இந்தாண்டு புதிதாக 92 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் காரணமாக கூடுதலாக 22,080 பொறியியல் இடங்கள் கிடைத்தன.
பொறியியல் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், போதிய அளவு மாணவர்கள் சேராத காரணத்தால் இந்தாண்டு பொறியியல் காலி இடங்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 199 ஆக அதிகரித்துள்ளது. இந்த இடங்கள் அனைத்தும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்தவை.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் பிற மாநிலப் பிரிவில் 12 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :