பொதுப்பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு துவங்கியது

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர்கள் கலந்தாய்வு இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 2,560 இடங்கள் உள்ளன. இது தவிர தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 93 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன.

இவற்றை நிரப்புவதற்கான முதல் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று துவங்கி வரும் 29ஆம் தேதி வரை நடக்கிறது. முதற்கட்ட கலந்தாய்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 161 வரை பெற்ற 60 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏற்கெனவே 1,900 இடங்கள் உள்ளன. இவற்றில் 600 இடங்கள் இந்த ஆண்டு அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்ததால் மொத்த இடங்களின் எண்ணிக்கை 2,500 ஆக உயர்ந்தது.

பர்கூர் கல்லூரியில் புதிதாக மெக்கானிக்கல் பிரிவு தொடங்கப்பட்டதை அடுத்து, அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 2,560 ஆக அதிகரித்துள்ளது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.32,500 கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :