புகைப்படத்துடன் பொதுதேர்வு மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (21:03 IST)
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வி துறை மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தென்னரசு, “இந்தியாவிலேயே முதன்முறையாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டில் (2010-11) நடை முறைப்படுத்தப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மதிப்பெண் பட்டியலில் மோசடி, ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தை இ.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியலில் பரீட்சார்த்த முறையில் கொண்டு வந்தோம். அது வெற்றிகரமாக இருந்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை நடைமுறப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாணவர்களின் புகைப்படத்துடன் மதிப்பெண் பட்டியல் வழங்கும் போது கெஸட் அதிகாரியின் கையெழுத்து தேவையில்லை. மதிப்பெண் பட்டியலில் மாணவர்களின் புகைப்படம் இடம்பெறும் போது எவ்வித சந்தேகமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
மதிப்பெண் பட்டியலில் ஏற்கனவே கண்ணுக்கு தெரியாத சந்தேக குறியீடுகள் உள்ளன. இதையும் மீறி மோசடி நடப்பதை தடுப்பதற்காகத்தான் இத்திட்டத்தை கொண்டு வருகிறோம். இத்திட்டத்தை இந்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்துவது சிரமம் என்பதால் அடுத்த கல்வி ஆண்டில் இதனை அமல்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை தருமாறு தேர்வுத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :