நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கடல்சார் பயிற்சி கல்லூரியில் சேர தடை

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 24 செப்டம்பர் 2009 (12:24 IST)
நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கடல்சார் பயிற்சிக் கல்லூரிகளில் சேர உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடல்சார் பயிற்சிக் கல்லூரிகள் சங்க செயலர் பி.வி.ஜோதிகுமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு‌வி‌ல், இந்தாண்டு கடல்சார் பட்டயப்படிப்பு வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை, கடந்த ஜூலையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 27 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கல‌ந்தா‌ய்வு நடந்தது.
இதில் 18 கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 8 கல்லூரிகளுக்கு மாணவர்கள் அனுப்பப்படவில்லை. கல‌ந்தா‌ய்‌வி‌ற்கு வந்த மாணவர்களில் 1,700 பேரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் தவறான முடிவு காரணமாக கல்லூரிகளும், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்களை கல்லூரியில் சேர்ப்பதற்கு வசதியாக பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்துள்ளது. துணைவேந்தரின் ஒத்துழைப்புடன் இது நடந்துள்ளது.
எனவே, நுழைவுத் தேர்வு எழுதாத மாணவர்களை கல்லூரியில் சேர்க்க தடை விதிக்க வேண்டும் எ‌ன்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்களை கடல்சார் பயிற்சி கல்லூரிகளில் சேர்க்க 4 வாரத்துக்கு இடைக்கால தடைவிதித்தார். மேலு‌ம் இதுபற்றி கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதில் மனு தாக்கல் செய்ய தாக்கீது அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :