நன்கொடை வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: அரசு எச்சரிக்கை

செ‌ன்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய பள்ளி கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எந்த பள்ளியாக இருந்தாலும், மாணவர்களை சேர்ப்பதற்கு நன்கொடை வசூலிக்கக் கூடாது.

அரசின் உத்தரவை மீறி பள்ளிகள் நன்கொடை வசூலிப்பது தெரியவந்தால், அவற்றின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
பிளஸ் 1 சேர்க்கையின் போது அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் பிரச்சனை ஏற்பட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு புகார் தெரிவிக்கலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடத்தும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை 200 ரூபாயும், 9, 10 வகுப்புகளுக்கு 250 ரூபாயும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வசூலித்தாலும் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.
எல்லா பள்ளிகளிலும் சிறுவர்களை ஆசிரியர்கள் கடுமையாக தண்டிப்பது, இழிவுபடுத்துவது போன்ற செயல்களை தடுக்கவும், அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளி கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

புகார்களை பெறுவதற்காக கடந்த 2007ம் ஆண்டு பள்ளி கல்வித் துறையில் புகார் மையம் தொடங்கப்பட்டது. அதற்காக 2827-3591 என்ற தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் வரும் புகார்களை பதிவு செய்ய இணை இயக்குனர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார் என பெருமாள்சாமி கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :