தொலைதூர கல்வி முறையில் பொறியியல் படிப்பு: செயின்ட் பீட்டர்ஸ் பல்கலை. துவக்கம்

ஒசூர்| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:57 IST)
தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பொறியியல் படிப்புகளை வழங்கும் திட்டத்தை தென் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழகம் துவக்கியுள்ளது.

ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் இத்திட்டத்தை கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் பிளஸ்-2 முடித்தவர்களில் 10% பேர் மட்டுமே உயர் கல்வியைத் தொடர்கின்றனர். மற்ற மாணவர்கள் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக உயர் கல்வியைத் தொடருவதில்லை.
இந்தியாவில் இதுவரை 4 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பொறியியல் பாடத்தை தொலைதூரக் கல்வி முறையில் வழங்குகின்றன. தென் இந்தியாவில் முதன் முதலாக சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழகம் இத்திட்டத்தைத் துவக்கியுள்ளது. இந்த தொலைதூரக் கல்வித் திட்டம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் பொறியியல் படிப்பு கற்க முடியும்.
இதன் மூலம் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொலைதூரக் கல்வி மூலம் டிப்ளமோ படிப்புத் தொடரலாம். டிப்ளமோ படிப்பு முடித்ததும் பிஇ, பிடெக் படிப்புகளை படிக்க முடியும்.

மிகவும் பின்தங்கிய, சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள் இந்தத் தொலைதூரக் கல்வியைப் படிக்க 100 சதவீதம் உதவித்தொகையை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக் கழகம் வழங்குகிறது என்றார் தம்பிதுரை.
விழாவில் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை தொலைதூரக் கல்வித் திட்டத்தின் பாடப் புத்தகங்களை வெளியிட்டுப் பேசுகையில், செயின்ட் பீட்டர் பல்கலையில் தொலைதூரக் கல்வி மூலம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும்.

இதுபோன்ற தொலைதூரக் கல்வி மூலம் வேலையில் இருப்பவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் உயர்கல்வி கற்க முடியும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :