தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத் திட்டம்: தயாரிப்புப் பணிகள் தீவிரம்

சென்னை| Webdunia| Last Modified வெள்ளி, 31 ஜூலை 2009 (11:49 IST)
தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு என்னென்ன தேவை என்பது குறித்த திட்டத் தயாரிப்புப் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (சர்வ சிக்சா அபியான் திட்டம்) செயல்படுத்தப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து, மாணவர்களின் இடைநிற்றலைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக உயர்நிலைப் பள்ளிகளில் ‘தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்’ (ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்சா அபியான்-ஆர்.எம்.எஸ்.ஏ.) செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதில் 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தரமான கல்வி உறுதி செய்யப்படும். இதற்கான முதற்கட்ட ஆய்வு மற்றும் திட்ட தயாரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு என்னென்ன தேவைகள் என்பது குறித்த திட்ட தயாரிப்புப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மெட்ரிக் பள்ளியில் கடந்த 3 நாட்களாக இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திட்ட தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பெருமாள்சாமி, இணை இயக்குநர் கார்மேகம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். திட்ட தயாரிப்பு பணி நிறைவு பெற்றதும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அவர் அரசுக்கு பரிந்துரைத்த பின்னர், புதுதில்லியில் உள்ள மனிதவளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :