தமிழகத்தில் சி.பி.எஸ்.இ.க்கு நிகராக 18 ஒன்றியங்களில் மாதிரி பள்ளி

சென்னை| Webdunia| Last Modified வெள்ளி, 30 அக்டோபர் 2009 (13:32 IST)
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நிகரான தரத்திலான 18 மாதிரிப் பள்ளிகள் தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய பின்தங்கிய மாவட்டங்களில் முதற்கட்டமாக உருவாக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.3 கோடி நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது.

தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்சா அபியான் ஆர்.எம்.எஸ்.ஏ) கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மாணவிகளை கல்வியில் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்ட ஒன்றியங்களில் ‘மாதிரி பள்ளிகள’ உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்பள்ளிகள் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நிகராக அமைய உள்ளது.

தமிழகத்தில் முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்தில் நல்லூர், பண்ருட்டி; தருமபுரியில் கெலமங்கலம், பென்னகரம், சோழகிரி; ஈரோட்டில் அம்மாப்பேட்டை, மூலனூர், நம்பியூர்; கரூரில் கடவூர்; நாமக்கல்லில் கொல்லிமலை; சேலத்தில் எடப்பாடி, கடையாம்பட்டி, கொங்கணாபுரம், எஸ்.புதூர்; விழுப்புரத்தில் ரிஷிவந்தியம், தியாகதுர்கம், திருக்கோயிலூர் ஆகிய 18 ஒன்றியங்களில் ‘மாதிரி பள்ளிகள’ கட்டப்பட உள்ளன.
இந்த ‘மாதிரி பள்ளி’களில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியும் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன. முதற்கட்டமாக தமிழகத்திற்கு ரூ.3 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதேபோல் பின்தங்கிய மாவட்டங்களில் 44 மாணவியர் விடுதிகள் கட்டப்பட உள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :