சென்னை பல்கலை.யில் 5 ஆ‌ண்டு முதுகலை பட்டப்படிப்பு

Webdunia| Last Modified வியாழன், 21 மே 2009 (11:55 IST)
பிளஸ் 2 படித்தவர்கள் நேரடியாக சேர்ந்து படிக்கும் வகையில் 5 ஆண்டு எம்.ஏ. பட்டப் படிப்புகளை, இந்த ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறியதாவது, சென்னை பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 6 புதிய முதுநிலை படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் 4 எம்.ஏ. பட்டப்படிப்புகளும், 2 எம்.எஸ்சி பட்டப்படிப்புகளும் அடங்கும். எம்.ஏ. பட்டப்படிப்பில் மானிடவியல், தற்கால வளர்ச்சி மேலாண்மை, பிரெஞ்சு, வாழ்க்கை அறிவியல் ஆகிய தலைப்புகளில் பட்டப்படிப்புகள் படிக்க முடியும். இவை, ஒவ்வொன்றும் 5 ஆண்டு படிப்புகள். பிளஸ் 2 படித்தவர்கள் இந்த படிப்புகளில் நேரடியாக சேர முடியும்.
மேலும், இந்த எம்.ஏ. பட்ட வகுப்பில் சேருவோர் ஓராண்டு மட்டுமே போதும் என்றால், அந்த ஓராண்டுக்கு மட்டும் சான்றிதழ் படிப்புக்கான சான்று வழங்கப்படும். இரண்டு ஆண்டு மட்டும் படித்துவிட்டு அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டால் டிப்ளமோ சான்று வழங்கப்படும். 3 ஆண்டுகள் படித்து முடித்தால் இளநிலைப் பட்டம் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் படித்தால் முதுநிலை டிப்ளமோ சான்று வழங்கப்படும். 5 ஆண்டுகளை நிறைவு செய்தால் எம்.ஏ. பட்டம் வழங்கப்படும். இந்த எம்.ஏ. பட்டப் படிப்புகளுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
இதுதவிர, பி.இ. பட்டம் பெற்ற மாணவர்கள் சேர்ந்து படிக்க வசதியாக, இரண்டு எம்.எஸ்சி படிப்புகளையும் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய தலைப்புகளில் இந்த எம்.எஸ்சி முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட படிப்புகளுக்கான கட்டணம் ஆ‌ண்டு‌ ஒ‌ன்று‌க்கு ரூ.4,500 ஆகு‌ம் எ‌ன்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :