சித்தா, ஆயுர்வேதப் படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்

சென்னை| Webdunia| Last Modified திங்கள், 13 ஜூலை 2009 (13:11 IST)
சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.

பி.எஸ்.எம்.எஸ் (சித்த மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ் (ஆயுர்வேதம்), பி.யு.எம்.எஸ். (யுனானி), பி.என்.ஒய்.எஸ் (இயற்கை-யோகா மருத்துவம்), பி.எச்.எம்.எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளில் 2009-10ஆம் கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி (50 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள்), 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி (100 பி.எஸ்.எம்.எஸ். இடங்கள்), சென்னை அரும்பாக்கத்தில் அரசு யுனானி மருத்துவக் கல்லூரி (26 பி.யு.எம்.எஸ். இடங்கள்), சென்னை அரும்பாக்கத்தில் அரசு இயற்கை மருத்துவக் கல்லூரி (20 பி.என்.ஓய்.எஸ்), மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (50 பி.எச்.எம்.எஸ் இடங்கள்) என தமிழகத்தில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
சேலத்தில் தனியார் மூலம் தொடங்கப்பட்டுள்ள சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியின் 50 பி.எஸ்.எம்.எஸ் இடங்களுக்கு இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க சித்த மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதவிர இந்திய மருத்துவ முறையிலான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 790க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும் இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஆனால், அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.5 ஆயிரம். தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.30 ஆயிரம்.
சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை, மதுரை திருமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள மேலே குறிப்பிட்ட இந்திய மருத்துவ முறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500 என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் கலந்தாய்வு துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :