கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசுகள் அதிகரிக்க கபில் சிபல் வலியுறுத்தல்

புதுடெல்லி| Webdunia| Last Modified செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (13:10 IST)
அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற, கல்விக்காக ஒதுக்கும் நிதியை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

ஆறு முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் பேசிய அமைச்சர் கபில் சிபல், அனைவருக்கும் கல்வி திட்டத்தை நிறைவேற்றிட, 11வது திட்ட காலத்தில் ரூ.45 ஆயிரம் கோடி செலவிடப்படும். எஞ்சிய தொகை அடுத்த திட்ட காலத்தில் செலவிடப்படும்.
இந்தத் திட்டத்துக்கு ரூ.60 கோடி நிதி பற்றாக்குறை உள்ளது. எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மொத்தம் தேவைப்படும் ரூ.1.5 லட்சம் கோடி நிதியை திரட்டும் வகையில் மாநில அரசுகளும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கபில் சிபல் கேட்டுக்கொண்டார்.
மாநில அரசுகள் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தால்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6% நிதி என்ற இலக்கை அடைய முடியும். இனியும் காலம்தாழ்த்தாது ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கபில் சிபல் வலியுறுத்தினார்.

உயர் கல்வி சீரமைப்பு குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட யஷ்பால் கமிட்டியின் பரிந்துரைகளை பரிசீலிக்கவும் அதை அமல்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வடிவமைக்கவும் உயர்நிலை குழு அமைக்கப்படும்.
நாடு முழுவதும் ஒரே கல்வி வாரியம் என்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை. ஒவ்வொரு வாரியத்துக்கும் உள்ள தனித்தன்மையை அரசு மதிக்கிறது என்றார் கபில் சிபல். இந்தக் கூட்டத்தில் தமிழகம் உட்பட 25 மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :