கல்லூரி விரிவுரையாளர் தகுதித்தேர்வில் ‘மைனஸ் மார்க்’ வழங்கும் முறை அறிமுகம்

சென்னை| Webdunia| Last Modified புதன், 21 அக்டோபர் 2009 (10:23 IST)
யு.ஜி.சி. நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் தகுதித்தேர்வில் (நெட்) அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவறான விடைகளுக்கு ‘மைனஸ’ மார்க் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்ற ‘நெட்’ அல்லது ‘ஸ்லெட’ தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் ‘நெட’ (NET) தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. ஆண்டுக்கு இருமுறை (ஜூன்,டிசம்பர்) இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
மாநில அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வை அந்தந்த மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் நடத்தும். நெட் தேர்வைப் போன்று ஸ்லெட் தேர்வு குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படுவது இல்லை. நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் விரிவுரையாளராக சேரலாம். ஆனால், ‘ஸ்லெட்’ (SLET) தேர்வில் தேர்ச்சி பெற்றால் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும்.
நெட் தேர்வு திட்டமிட்டபடி ஆண்டுதோறும் நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான முதுநிலை பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் எழுதுகிறார்கள். இந்த தேர்வில் மொத்தம் 3 பகுதிகள் உண்டு. முதல் பகுதி அனைவருக்கும் பொதுவானது. இதில் கொள்குறிவகை முறையில், 50 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 100.
இரண்டாம் பகுதியில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து இதேபோல் கொள்குறிவகையில் 50 வினாக்கள் கேட்கப்படும். இதற்கும் மொத்த மதிப்பெண் 100.

மூன்றாம் பகுதி, விரிவான விடையளிக்கக் கூடிய பகுதி ஆகும். இதில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்பார்கள். பொதுஅறிவு பகுதியான முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 2ஆம் மற்றும் 3ஆம் பகுதி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.
இந்நிலையில், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கொள்குறிவகையில் நடத்தப்படும் முதல் 2 பகுதி தேர்வுகளிலும் தவறான விடைகளுக்கு மைனஸ் மார்க் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இரண்டு விடைகள் தவறாக இருந்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். தெரியாத கேள்விகளுக்கு கூட ஏதாவது ஒன்றை டிக் செய்து மதிப்பெண் பெறும் வாய்ப்பு இருப்பதால் அதைத் தடுப்பதற்காக இந்த புதியமுறை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், பொது அறிவு பகுதியான முதலாவது தேர்வில் வழக்கமாக 50 வினாக்கள் கேட்கப்படும். அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும். தற்போது இதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வு எழுதுவோருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் 50 கேள்விகளுக்குப் பதிலாக 60 கேள்விகள் கேட்கப்படும்.
இதில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான வினாக்களை தேர்வுசெய்து விடையளிக்கலாம். ஒருவேளை 60 வினாக்களுக்கும் விடையளித்து இருந்தால் முதல் 50 வினாக்களை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான 2வது நெட் தேர்வு தொடர்பான அறிவிப்பை யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி, 27ஆம் தேதி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு நவம்பர் மாதம் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கலை, சமூக அறிவியல், மொழிப் பாடங்கள் படித்தவர்கள் தேர்வு எழுத தகுதியுடையவர்கள். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். (அறிவியல், கணிதம், சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான ‘நெட’ தேர்வு யு.ஜி.சி. மற்றும் சி.எஸ்.ஐ.ஆர். மூலம் தனியே நடத்தப்படுகிறது.)
முதுநிலை படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர் என்றால் 50% மதிப்பெண் போதுமானது. தேர்வுக்கட்டணம் ரூ.450. ஓ.பி.சி. வகுப்பினருக்கு ரூ.225. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், உடல் ஊனமுற்றோருக்கு ரூ.110 மட்டும்.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை ‘நெட’ தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் விண்ணப்பத்தை மேற்கண்ட ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
தேர்வு பற்றிய முழு விவரம், பாடத்திட்டம் மாதிரி விண்ணப்ப படிவம் ஆகியவை யு.ஜி.சி. இணையதளத்தில் (ugc.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி வெளியாகும் ‘எம்ப்ளாய்மெண்ட் நியூஸ’ இதழிலும் நெட் தேர்வு பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :