கணினி பயிற்சியாளர் பணி: ஆட்தேர்வை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
அரசு பள்ளிகளில் கணினி பயிற்சியாளர் பணிக்காக 906 நபர்களை தமிழக அரசு தேர்வு செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 1,800 அரசு பள்ளிகளில் கணினி பயிற்சியாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக, தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சிறப்பு தேர்வு நடத்தியது.

இந்த பணி நியமனத்துக்கு குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று விதிமுறை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிந்த பிறகு, இந்த குறைந்தபட்ச மதிப்பெண் 35% ஆக குறைக்கப்பட்டது.
இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பில், போட்டி என்று தொடங்கிவிட்டால் விதிகளில் மாற்றம் செய்யவோ அல்லது தளர்த்தவோ கூடாது.
தமிழக அரசால் தேர்வு நடத்தப்பட்ட பிறகு குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை அனுமதிக்க முடியாது. எனவே தமிழக அரசு தேர்வு செய்துள்ள 906 கணினி ஆசிரியர்களின் தேர்வு செல்லாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :