ஐ.ஐ.டி. பேராசிரியர்களுடன் கபில் சிபல் நாளை சந்திப்பு

புதுடெல்லி| Webdunia| Last Modified வியாழன், 1 அக்டோபர் 2009 (12:26 IST)
மத்திய அரசுக்கும், இந்திய தொழில்நுட்பக் கழக பேராசிரியர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை களையும் விதமாக, போராட்டம் நடத்தி வரும் ஐ.ஐ.டி. பேராசிரியர்களின் பிரதிநிதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் நாளை சந்தித்துப் பேசுகிறார்.

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி, ஐஐஎம்) பணியாற்றும் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய பரிந்துரையில் பதவி உயர்வு, திறமை அடிப்படையிலான ஊக்கத் தொகை ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை வழக்கத்திற்கு மாறாகவும், ஐஐடி ஆசிரியர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி ஐ.ஐ.டி.யில் 40% பேராசிரியர்களுக்கே முதுநிலை அந்தஸ்து அளிக்கப்படும் என்ற அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று சம்மேளனம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிராகரித்து விட்டதாகவும் சம்மேளனத் தலைவர் தேன்மொழி தெரிவித்தார். இதைக் கண்டித்து கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி முதல் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பிரதிநிதிகள், ஐ.ஐ.டி பேராசிரியர் சம்மேளனப் பிரதிநிகளுக்கு இடையே நாளை டெல்லியில் பேச்சு நடத்தப்பட உள்ளதாகவும், இதில் அமைச்சர் கபில் சிபல் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :