ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பற்றாக்குறை: மத்திய அரசு

புதுடெல்லி| Webdunia| Last Modified புதன், 2 டிசம்பர் 2009 (18:20 IST)
அரசின் நிதியுதவியில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களில் 25% ஆசிரியர்கள் இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று மக்களவையில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் மக்களவையில் இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், “ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய மூத்த பேராசிரியர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக 25% காலியிடம் ஏற்பட்டுள்ளத” எனக் கூறியுள்ளார்.

ஐ.ஐ.டி. நிறுவனங்களில் மொத்தமுள்ள 4,267 பேராசிரியர் பணியிடங்களுக்கு தற்போது 2,983 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாகவும், ஐ.ஐ.எம் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 468 பணியிடங்களுக்கு தற்போது 388 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாகவும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் என்.ஐ.டி. எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலும் பேராசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறிய கபில் சிபல், இங்கு 3,747 பேராசிரியர் பணியிடங்களுக்கு 2,603 பேர் மட்டுமே பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :