எம்.எஸ்சி. நர்சிங் கலந்தாய்வு நாளை துவக்கம்

சென்னை| Webdunia| Last Modified திங்கள், 20 ஜூலை 2009 (17:18 IST)
எம்.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நாளை காலை துவங்குகிறது.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் எம்.எஸ்ஸி. (நர்சிங்) படிப்பு இதுவரை இருந்தது. நடப்புக் கல்வி ஆண்டில் (2009-10) மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்சி. (நர்சிங்) படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்த (25 இடங்களுக்கு) இந்திய நர்சிங் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

எம்.எஸ்சி. (நர்சிங்) படிப்புக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள 22 இடங்கள், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 25 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 126க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்சி. (நர்சிங்) படிப்புக்கு கடந்த மாதம் கலந்தாய்வு நடைபெற்ற போது, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்வது தொடர்பான பிரச்னை ஏற்பட்டு திடீரென ரத்து செய்யப்பட்டது.

பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்பு, மருத்துவமனையில் ஓர் ஆண்டு பணி, நர்சிங் கவுன்சிலில் பதிவு ஆகியவை எம்.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு உரிய தகுதிகளாகும். இவற்றில் நர்சிங் கவுன்சிலில் நிரந்தரப் பதிவு தொடர்பாக கடந்த மாத கவுன்சலிங்கின் போது பிரச்னை எழுந்தது.
ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மூலம், “தாற்காலிகப் பதிவு போதும” எனக் கடிதம் வந்து விட்டதால், இந்த முறை ஏதும் பிரச்னை இருக்காது என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.ஃபார்ம், எம்.பி.டி.: எம்.ஃபார்ம், எம்.பி.டி. ஆகிய படிப்புகளிலும் மாணவர்களைச் சேர்க்கவும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் ஜூலை 22, ஜூலை 23 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

எம்.எஸ்சி. (நர்சிங்) படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள 387 பேருக்கும், எம்.ஃபார்ம். படிப்புக்கு 404 பேருக்கும் எம்.பி.டி. படிப்புக்கு 70 பேருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :