இம்மாத இறுதியில் MBBS 2ஆம் கட்ட கலந்தாய்வு

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
மருத்துவப் படிப்பில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப இம்மாத இறுதியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 MBBS இடங்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உட்பட 4 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 283 அரசு ஒதுக்கீட்டு MBBS இடங்களுக்கு கடந்த ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.
முதற்கட்ட கலந்தாய்வின் போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 1,398 மாணவர்களில், 14 பேர் பொறியியல் உட்பட வேறு படிப்புகளில் சேர்ந்ததால் அவற்றில் காலியிடம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் முதல் கட்ட கவுன்சலிங்கில் அனுமதிக் கடிதம் பெற்ற அனைத்து மாணவர்களும் சேர்ந்து விட்டதால், இவற்றில் காலியிடம் இல்லை.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் நான்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளதாக கல்லூரி நிர்வாகங்களிடமிருந்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு தகவல் வந்துள்ளது.

ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரியின் மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரியவை ஆகும். மத்திய சுகாதார மருத்துவத் துறையின் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இப்போது நடைபெற்று வரும் 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் 2ஆம் கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள 14 காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள 4 காலியிடங்கள், மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மூலம் கிடைக்கும் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், திருச்சியில் தொடங்கப்படும் சென்னை மருத்துவக் கல்லூரி மூலம் கிடைக்கும் 97 அரசு ஒதுக்கீட்டு MBBS இடங்கள் ஆகியவற்றுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வின் போது மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
காலியிடங்கள் அனைத்தையும் முழுமையாக மதிப்பீடு செய்து நிரப்ப வசதியாகவே மாத இறுதியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :