இந்தியாவில் 22,762 திறந்தவெளி பள்ளிகள்: மனித வள அமைச்சகம் தகவல்

புதுடெல்லி| Webdunia|
இந்தியாவில் 22,762 ஆயிரம் பள்ளிகள் உரிய கட்டமைப்பு வசதியின்றி திறந்தவெளியில் செயல்பட்டு வருவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கல்விக்கு முக்கிய பங்கு அளித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 22,762 பள்ளிகள் கட்டிட வசதியின்றி திறந்தவெளியில் நடந்து வருவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் 7,827 பள்ளிகளுக்கு கட்டிடங்கள் இல்லை என்றும், மேலும் 1,757 பள்ளிகள் கூடாரத்தில் இயங்கி வருவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் 4,400 பள்ளிகளும், பீகாரில் 3,424 பள்ளிகளும், உத்தர பிரதேசத்தில் 2,200 பள்ளிகளும் திறந்த வெளியில் இயங்குகின்றன.

கூடாரங்களில் இயங்கும் பள்ளிகள் கொண்ட மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முன்னிலை பெற்றிருக்கிறது. கடந்த 2008-09ஆம் ஆண்டு சர்வ சிக்-ஷா அபியான் திட்டத்தின் கீழ், 6,483 பள்ளிகளில் செப்பனிடும் பணிக்காக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மனிதவள அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :