ஆங்கிலப் பேச்சுத் திறன் குறைவாக உள்ளவர்களுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்: பூங்கோதை வலியுறுத்தல்

சென்னை| Webdunia|
தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி.) துறையில், ஆங்கிலப் பேச்சாற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் உள்ள முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் அமைப்பான ‘நாஸ்காம’ சார்பில், ஐ.டி. நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறையினருக்கான 2 நாள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.

மாநாட்டைத் துவக்கி வைத்து அமைச்சர் பூங்கோதை பேசுகையில், தகவல் தொழில் நுட்பத்துறையில் தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத்துக்கென தனித்த கொள்கையைக் கொண்ட முதல் மாநிலம் தமிழகம்தான்.
சென்னையைத் தவிர, தமிழகத்தின் ஏழு இரண்டாம் நிலை மாநகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும். மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய 3 மாநகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணி விரைவில் தொடங்கும்.
நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் மிகுந்த அறிவுத் திறனுடையவர்களாக திகழ்கின்றனர். ஆனால் ஆங்கில பேச்சாற்றலில் திறன் குறைந்தவர்களாக உள்ளனர். ஆங்கில பேச்சாற்றல் திறன் குறைவாக இருப்பதன் காரணமாக அவர்களால் ஐ.டி. நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முடிவதில்லை.
தேவையான தகுதிகளைப் பெற்று, ஆங்கில பேச்சாற்றலில் மட்டும் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்க முன்வர வேண்டும் என்று அமைச்சர் பூங்கோதை வலியுறுத்தினார்.


இதில் மேலும் படிக்கவும் :