அரசு பள்ளிகளில் 6,500 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் இடங்களை நிரப்ப த‌‌மிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில், கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை 6,500 இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அவருடைய கருத்தை ஏற்று, காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, முதுநிலை ஆசிரியர்கள் 1,474 பேர் நியமிக்கப்படு‌கிறா‌ர்க‌ள். அவர்களில் 731 பேர் நேரடி நியமனம் மூலமும், 743 பேர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படு‌கிறா‌ர்க‌ள்.

பட்டதாரி ஆசிரியர்கள் 4,604 பே‌ர், சிறுபான்மை மொழிப்பாட ஆ‌சி‌‌‌ரிய‌ர்க‌ள் 167 பே‌ர், உடற்கல்வி ஆசிரியர் 143 பே‌ர், ஓவிய ஆசிரியர் 51 பே‌ர், இசை ஆசிரியர் 10 பே‌ர், தையல் ஆசிரியர் 20 பேர் நியமிக்கப்படு‌கிறா‌ர்கள்.
சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்களில் நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 165, கோவை 31, மதுரை மாநகராட்சியில் 62 ஆசிரியர்கள் நியமிக்கப்படு‌கிறார்கள்.

இவர்களில் 29 முதுநிலை ஆசிரியர்கள், 155 பட்டதாரி ஆசிரியர்கள், 7 சிறுபான்மை பட்டதாரி, 62 உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம் இசை ஆசிரியர்கள் 5 பேர் நியமிக்கப்படு‌‌கிறா‌ர்க‌ள்.


இதில் மேலும் படிக்கவும் :