1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Webdunia

மீண்டும் மோதும் எடியூரப்பா - பரத்வாஜ்!

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும், ஆளுனர் பரத்வாஜுக்கும் இடையே கடந்த சில நாட்களாக அமுங்கிப்போயிருந்த மோதல் மீண்டும் வெடித்திருப்பதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எடியூரப்பாவுக்கு எதிராக நில ஊழல் உள்ளிட்ட 100 க்கும் அதிகமான முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறி, சுமார் 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன், வழக்கறிஞர்கள் சிராஜின் பாஷா மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதியன்று மனு ஒன்றினை ஆளுனர் பரத்வாஜிடம் அளித்திருந்தார்கள்.

இம்மனுவை பரிசீலித்த பரத்வாஜ், வருகிற 26 ஆம் தேதிக்கு, அதாவது குடியரசு தினத்திற்கு பிறகு எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அத்துடன் தமது இந்த முடிவை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று தம்மை சந்தித்த எடியூரப்பாவிடமும் அவர் தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்தநிலையில்தான் எடியூரப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுனர் பரத்வாஜ் அனுமதி வழங்கக் கூடாது என்று கர்நாடக மாநில அமைச்சரவை, கடந்த 19 ஆம் தேதியன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, அதனை அவருக்கு அனுப்பி வைத்தது.

கர்நாடக அமைச்சரவை இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது பற்றி பரத்வாஜிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்டபோது, "திருடர்கள் போலீசை எச்ச்ரிக்கிறார்கள்" என்று கேலியாக கருத்து தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து வெளியானதுமே கொந்தளித்துவிட்டார் எடியூரப்பா.உடனடியாக பரத்வாஜூக்கு காட்டமாக கடிதம் ஒன்றை எழுதிய அவர், தம்மையும், கர்நாடக அமைச்சர்களையும் மட்டுமல்லாது கர்நாடக அமைச்சர்களையும் அவர் அவமதித்துவிட்டதாகவும், எனவே இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

கூடவே டெல்லி பா,ஜன்தா மேலிடத்திற்கும் இது குறித்து கடிதம் ஒன்றை தட்டிவிட்ட எடியூரப்பா, நாளை அமைச்சரவையை கூட்டி இது குறித்து விவாதிக்கப்போவதாகவும் இன்று பெங்களூரில் தம்மை சந்தித்த செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறினார்.

அநேகமாக நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆளுனர் பரத்வாஜை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பா.ஜனதாவின் மத்திய தலைமையை சேர்ந்த தலைவர்களும், கர்நாடக மாநில பா.ஜனதா எம்.பி.க்களும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை வருகிற 24 ஆம் தேதியன்று நேரில் சந்தித்து, ஆளுனர் பரத்வாஜின் நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்து, அவரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தப்போவதாகவும், எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதனிடையே பா.ஜனதா டெல்லி மேலிடம், கர்நாடக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் பொதுச் செயலாளர் தர்மேந்தரா பரதனை பெங்களூருக்கு அனுப்பிவைத்துள்ளது. அவர் இன்று மாநில பா,.ஜனதா தலைவர்களுடன் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுனர் பரத்வாஜும் அசராமல் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளார், ஊழல் குற்றச்சாற்று தொடர்பாக எடியூரப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளிக்கக்கூடாது என்று கர்நாடக மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, எடியூரப்பாவுக்கு காட்டமாக இன்று கடிதம் எழுதியுள்ள பரத்வாஜ், அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தேவையற்றது என்றும், ஊழல்கள் குறித்த தீவிரமான குற்றச்சாற்றுக்களை தம்மால் மூடிமறைக்க முடியாது என்றும், ஆனால் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் உங்களுக்கு (எடியூரப்பா) எதிரான ஊழல் குற்றச்சாற்றுக்களை மூடி மறைக்குமாறு என்னை கோருகிறது" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

எடியூரப்பாவுக்கு எதிராக பரத்வாஜ் இந்த அளவிற்கு சாட்டையை சுழற்றிவிட்டதால், அநேகமாக வருகிற 26 ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு பிற்கோ எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் குறித்து அவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்துவிடுவார் என்றே தெரிகிறது.

இதனால் வரும் நாட்களில் கர்நாடக அரசியலில் அனல் வீச்சை அதிகமாகவே பார்க்கலாம்!