வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Webdunia

காஷ்மீரில் மீண்டும் கலவர அச்சம்!

ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றப்போவதாக பா.ஜனதா அறிவித்தாலும் அறிவித்தது, காஷ்மீரை மீண்டும் கலவர அச்சம் சூழ்ந்துகொண்டுள்ளது.

அதிலும் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திட்டமிட்டு இன்று ஜம்மு வந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ்,அருண்ஜெட்லி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில் மத்திய படையினரை எதிர்த்து பிரிவினைவாத தலைவர்களோடு, இதுவரை இல்லாத வகையில் காஷ்மீர் மக்களும் கைகோர்த்து கலவரம்,கல்வீச்ச் என களமிறங்கியதை பார்த்து மத்திய அரசே அதிர்ச்சியடைந்துதான் போனது.

பின்னர் அனைத்துக் கட்சிகத் தலைவர்கள் அடக்கிய தூதுக்குழுவினரை காஷ்மீருக்கு அனுப்பி, அம்மாநில அரசியல் கட்சிகள்,அமைப்புகள்,பிரிவினைவாத குழுக்கள் மற்றும் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து,பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை அமைத்தது.

அக்குழு ஜம்மு காஷ்மீருக்கு சென்று நடத்திய ஆய்வின் அடிப்படையில், அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் கையளித்தது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றபோதிலும் படைகுறைப்பு,இராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பது உள்ளிட்ட சில யோசனைகளை அக்குழு முன்வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இவ்வாறு அதிகாரப்பூர்வமற்ற முறையில் செய்தி வெளியானதற்கே," இராணுவ அதிகாரத்தை குறைப்பதோ அல்லது படையினரின் எண்ணிக்கையை குறைப்பதோ கூடாது!" என்று பா.ஜனதா குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டது.

இந்நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கிளப்பி ஓய்ந்துபோன பா.ஜனதா, ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலுள்ள லால் சவுக் பகுதியில் தமது கட்சியின் இளைஞர் அணி சார்பில் தனியாக தேசியக் கொடியேற்றி வைத்து குடியரசு தினவிழாவை கொண்டாடப் போவதாக அறிவித்தது.

இதற்காக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் தாகூர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய 'ராஷ்ட்ரீய ஏக்தா'என்ற யாத்திரை,வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் முடிவடைகிறது.அப்போது அங்கு தேசிய மூவர்ண கொடியை ஏற்றப்போவதாக தாகூர் அறிவித்தார்.

பா.ஜனதா இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பா.ஜனதாவின் இந்த நடவடிக்கை, ஓய்ந்துபோயுள்ள காஷ்மீர் கலவரத்தை பிரிவினைவாத தலைவர்கள் மீண்டும் தூண்டிவிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிடும் என்று கூறி, அதனை கைவிடுமாறு அக்கட்சியை கேட்டுக்கொண்டார்.

மத பதற்றம் மிகுந்த லால் சவுக்கில் அரசு சார்பில் மட்டுமே தேசியக் கொடியேற்ற வேண்டும் என்றும்,பா.ஜனதா தனியாக கொடியேற்றினால் காஷ்மீர் மீண்டும் தீப்பற்றி எரியும் என்றும் அவர் அச்சம் தெரிவித்திருந்தார்.

ஆனால் லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று ஏற்கனவே அறிவித்தபடி தேசியக் கொடி ஏற்றப்படும் என்று பா.ஜனதா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா,கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

இதற்கு பதிலடியாக பா.ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங், குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு கடிதம் ஒன்றை தட்டிவிட்டார்.

அதில்,"61 ஆவது குடியரசு தின விழாவை நாடு முழுவதம் உற்சாகமாக கொண்டாட வேண்டும். அதை தடுப்பது தவறானது. எனவே இதில் நீங்கள் தலையிட்டு லால்சவுக்கில் பா.ஜனதா சார்பில் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும், அது தான் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உகந்தது ஆகும்.

பா.ஜனதா சார்பில் தேசிய கொடியேற்றப்படுவதை எந்த முதல்வரோ, அரசியல் கட்சியோ, தனிப்பட்ட நபரோ இடையூறு செய்வதை தடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்தான்,குடியரசு தினத்திற்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள சூழ்நிலையில் பா.ஜனதா மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்,மாநிலங்களவை தலைவர் அருண் ஜெட்லி, மற்றொரு மூத்த தலைவர் அனந்த குமார் உள்ளிட்டவர்கள் லால் சவுக் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திட்டமிட்டு முன்னதாகவே இன்று ஜம்மு வந்தனர்.

ஆனால் விமான நிலையத்திலேயே அவர்களை மடக்கி கைது செய்த காவல்துறை, அவர்களை திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்ட நிலையில்,விமான நிலையத்தில் குவிந்த பா.ஜனதா தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக பாதுகாப்பு படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் காஷ்மீரில் பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது.அநேகமாக பா.ஜனதா தலைவர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்படலாம் அல்லது அரசு விருந்தினர் விடுதியில், குடியரசு தினம் முடிவடையும் வரை காவலில் வைக்கப்படலாம்.

ஆனால் அப்படி அவர்கள் காவலில் வைக்கப்பட்டாலும்,திட்டமிட்டபடி லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றியே தீருவோம் என்று உள்ளூர் பா.ஜனதா தலைவர்கள் ஆவேசம் காட்டியுள்ளனர்.

இதனால் குடியரசு தினம் வரை காஷ்மீர் மக்களுக்கு திக்... திக்...தான்!