வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2016 (17:04 IST)

இது பெரியாரின் சமூகநீதி பூமி தானே

இது பெரியாரின் சமூகநீதி பூமி தானே

இதுவும் கடந்து போகும் என்பதை போல காவிரி விவகாரம், ராம்குமார் தற்கொலை, முதல்வரின் உடல்நலம் என மற்ற நிகழ்வுகள் போல கோயம்புத்தூர் நிகழ்வுகளும் நம்மை கடந்து விட்டது. கலவரக்காரர்கள், கொள்ளைக்காரர்கள் ஆனா நிகழ்வை கோயம்புத்தூர் கண்டது.


 


நாங்கள் சமூகநல இயக்கம் என் மார் தட்டிய இயக்கங்கள் சாயம் வெளுத்து விட்டது. உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கலவரக்காரர்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. எங்கே உங்களின் தேசிய முகம். வலைத்தள மீடியாக்களே பதில் சொல்லுங்கள்.

முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டன. பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இஸ்லாமிய பெயர்கள் எழுதப்பட்ட ஆட்டோக்கள் உடைக்கப்பட்டன. இவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் உள்ளது. இது பெரியாரின் சமூகநீதி பூமி தானே? எங்களின் அருமை சகோதரி தமிழிசை ஜனநாயகம் எங்கே என்று கேட்கிறார். சகோதரி மேற்க்கண்ட வீடியோக்களை பார்க்கட்டும். நான் சகோதரியை பார்த்து கேட்கிறேன் எங்கே ஒருமைப்பாடு? மஹாலட்சுமி சூறையாடிய சூட்சுமம் அந்த சிதம்பரம் மட்டுமே அறிவார்.
 
ஒரு அநீதி நடக்கும்போது அதை செய்பவனைவிட அந்த அநீதிக்கு சாட்சியம் சொல்பவனே/கண்டும் காணாமல் இருப்பவனே குற்றவாளி. இந்து அமைப்புகள் மசூதிகள் மீது கல் எறிந்தபோது பொதுமக்களே அநீதிக்கு சாட்சியம் சொன்னீர்கள். சற்றே சிந்தித்து பாருங்கள், மதவாதிகள் பள்ளிவாசல் மீது கல் வீசுகிறார்கள். உங்கள் குழந்தை உடல் நலம் குன்றி இருந்த சமயம்  உங்களின் குழந்தைகளை மந்திரிக்கும் மோதின்களையும் உலமாக்களை நோக்கி கல் எறிகிறார்கள், நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள்.
 
சென்னையில் மவுண்ட் ரோடு தர்காவிலும், கோவளம் தர்காவிலும் கனத்த இதயத்துடன் வரும் என் அருமை இந்து மத சகோதரர்களை பார்த்திருக்கிறேன். பிரார்த்தனை செய்யும் மௌலவிகள் இவர்களை இந்து இதயங்களாக பார்ப்பது இல்லை. அவர்களை மனித இதயங்களாக பார்க்கிறார்கள். அந்த மௌலவிகளின் சமூகம் சூறையாடப்படுகிறது. நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். உங்கள் சகோதரர்களின் கடைகள் சூறையாடப்படுகிறது. நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். யாரைக் கண்டு பயப்படுகிறீர்கள்? ஏன் இந்த அமைதி? கோவை இஸ்லாமியர்கள் வந்தால் என்ன? அங்குள்ள ரஹீமும் ரகுமானும் உங்களின் பால்ய தோழர்கள் அல்லவா? நீங்கள் அழைத்த குரலுக்கு பதில் சொல்லும் இஸ்லாமியர்களின் ஆட்டோக்கள் தாக்கப்படுகிறது. நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். மதவாதிகளின் கூட்டம் மடு. கோவை வாசிகளே நீங்கள் மலை. மலை முன் மாடு ஆட்டம் போடுகிறது ஆனால். நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள்.
 
இறுதியாக கோவை வாசிகளே! உங்களின் நெஞ்சின் மீது கைவைத்து சொல்லுங்கள் "இது பெரியாரின் பூமி இங்கே மதவாதிகளுக்கு இடமில்லை என்று".