வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Veeramani
Last Updated : வெள்ளி, 9 மே 2014 (14:25 IST)

மாட்டின் கொம்பை பிடித்துப் போராடுவதை விடுத்து ஆதிக்கத்தை எதிர்த்து போராடுங்கள்

தமிழ்நாட்டு ஊடகங்களில் கடந்த இரு தினங்களாக ஜல்லிக்கட்டுக்குத் தடை என்ற செய்தி வந்துள்ளது. மிருகவதைத் தடுப்பு என்ற நோக்கில் இந்த தடை வந்திருக்கிறது.
உணவுக்காக மாடுகளை வளர்க்கும் தொழிலை அங்கீகரித்திருந்த புத்தமத அசோகர் ஆண்ட நாடு இது. மிருகங்களை வதைக்கக்கூடாது என்ற போர்வையில் ஆடு, மாடு, கோழிகளை உண்ணக்கூடாது என்ற விஷம பிரச்சாரம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகிறது.
 
அதேசமயம், உச்சநீதிமன்றம் இதுபோன்ற ஒருமுரட்டுத்தனமான – அறிவுக்கு வேலையற்ற ஒரு விளையாட்டைத் தடைசெய்ததை, தமிழர்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவரும் மனமாரப் பாராட்டி வரவேற்க வேண்டும்.
 
2000 ஆண்டுகளுக்கு முன்பு திணைவழிப்பட்ட பண்பாட்டுக் காலத்தில் காடும், காடு சார்ந்த இடமுமாகிய முல்லை நிலத்துத் தமிழர்களின் பொருளாதாரம் ஆடு, மாடுகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டங்களில் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏறுதழுவுதல் அவசியமாக இருந்திருக்கிறது. ஆடு,மாடுகளை வைத்துப் பிழைக்க வேண்டியவர்களுக்கு அவற்றை அடக்கும் தெம்பு இருக்க வேண்டும் என்பதற்காக அந்த முறை இருந்திருக்கலாம். 21 ஆம் நூற்றாண்டில் – வாழ்வதற்கு உடல் பலத்தைவிட மூளை பலமே முக்கியம் என்ற இந்த யுகத்திலும் கற்கால விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பது தேவையற்றது.
 
ஜல்லிக்கட்டு என்பது தொன்மையான விளையாட்டு – சங்க இலக்கியங்களிலேயே இதற்கு சான்றுகள் உள்ளன - தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றெல்லாம் இணைய தளங்களிலும், முகநூல்களிலும் வாதங்கள் அனல் பறக்கின்றன. எனவே அந்தச் சங்க இலக்கியங்களில் இந்த ஜல்லிக்கட்டைப் பற்றி அப்படி என்னதான் இருக்கின்றது என்று பார்க்கும்போதுதான் ஒரு ஜாதிக்குள் அல்லது ஒரு குலத்துக்குள் திருமணம் முடிக்கும் முறையோடு பிண்ணிப் பிணைந்ததே இந்த ஏறுதழுவல் என்பதைக் காணமுடிந்தது.
 
தொல்காப்பியத்திற்கும் முந்தையது என்ற ஒரு முற்றுப்பெறாத விவாதத்தில் உள்ள சங்க இலக்கியம் கலித்தொகை. அதில் முல்லைக்கலி என்ற பகுதியில் 103 வது பாடல் இதோ...
 
கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு:
குரவை தழீ, யாம், மரபுளி பாடி!
 
தான் காதலிக்கும் பெண்ணின் மார்பகங்களைப் போலக்கருதி ஆர்வமுடன் காளையைத் தழுவி, அணைத்து, அடக்கும் ஆயர் இளைஞரே, தம் மகளுக்குத் துணையாக வர வேண்டும் என பெற்றோர் விரும்புவார்கள். கொம்புகளுக்கு அஞ்சி, உயிருக்குப் பயந்து காளையை அடக்கும் போட்டியில் இறங்காத ஆய இளைஞரை ஆய மகள் விரும்பமாட்டாள்.
 
என்கிறது இந்தப்பாடல்.

இப்பாடல் மட்டுமல்ல, முல்லைக்கலியில் உள்ள இன்னும் சில பாடல்கள் ஆடு மாடுகளை அடிப்படையாக வைத்து வாழ்ந்தவர்களை ஆயர்குலம் என்றும், அந்த ஆயர் குலத்தின் வீரம், கொடை, திருமணமுறை, பொருளீட்டும் முறை, போன்ற பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை விளக்குகிறது. முல்லைக்கலியில் அல்லாமல் வேறு எந்த சங்க இலக்கியத்திலும் ஏறுதழுவல் பற்றிய விளக்கமான பாடல்கள் இல்லை. வேறுகுலத்தவர் அல்லது வேறு ஜாதியினர் எவரும் ஏறுதழுவலை அடிப்படையாக வைத்து மணஉறவுகளை மேற்கொள்ளவில்லை.
 
ஜாதிக்குள் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முறை வலுப்பெற்றதற்கு இந்த ஏறுதழுவல் என்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு மிக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியங்களே உறுதி செய்கின்றன. தமிழர்களின் ஆரம்பகால வரலாற்றில் ஆயர்குலத்தைத் தவிர மற்ற தமிழர்களுக்கும் இந்த ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இல்லை.
 
காலப்போக்கில் ஏறுதழுவல் என்பது ஜல்லிக்காட்டாகியுள்ளது. ஆயர்குலம் மட்டுமல்லாமல் மற்ற பிற்படுத்தப்பட்ட குலங்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளன. திருமணம் செய்வதற்கு அடிப்படை என்ற நிலையிலிருந்து பரிசுப்பொருள் பெறும் போட்டி என்ற நிலைக்கு மாறியுள்ளது. பல்வேறு குலங்கள் இந்த விளையாட்டில் பங்கேற்றாலும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பங்கேற்க இயலாத சூழல் இன்னும் மாறவில்லை. காலத்திற்கேற்ப தன்மை மாறி – தனது வடிவத்தை மாற்றிக்கொண்ட இந்த ஜல்லிக்கட்டு இந்தக் கணிணி யுகத்தில் அவசியமற்றது. தானாகவே அழியக்கூடியது. அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருப்பது சரியானது.
 
இந்தத்தடைச் செய்தி பரபரப்பாகியுள்ள இதே நாளில் நமக்குப் பெரும் அதிர்ச்சியாக வந்திருக்கும் இன்னொரு செய்தி விவாதத்திற்கே வரவில்லை என்பதுதான் வேதனை.
 
அகில இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் அதிகார மையங்களை ஆட்டிப்படைக்கும் - ஆதிக்க வர்ண ஜாதிக்காகவே நேந்து விடப்பட்டிருக்கும் - நவீன பிரம்மதேயங்கள்தான் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் நிறுவனங்கள். அந்தக் கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கு நடத்தப்பட்ட அகில இந்திய நுழைவுத்தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் 2.5 சதம் என்ற அளவில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 21,818 இடங்களைப் பிடித்து ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. 19,409 இடங்களைப் பெற்று உத்திரப்பிரதேசம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 16,867 இடங்களைப் பெற்று இராஜஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு இன்னும் மாடுகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு 14-ம் இடத்தில் தேங்கி நிற்கிறது.
 
இவை போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல. இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர்கள் உருவாகும் புதுடில்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம், டில்லிப் பல்கலைக்கழகம், அலிகார், பிட்ஸ் பிலானி போன்ற எவற்றிலும் தமிழர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி கிடையாது. அனைத்தும் இராஜராஜசோழன் உருவாக்கிய வேதபாடசாலைகளைப் போலவே ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் பண்ணையமாக இருக்கின்றன.
 
2000 ஆண்டுகளுக்கு முன்பு முல்லைநிலத்து தமிழர்கள் வாழ்வதற்கு மாடுகள் தேவை, மாடுகளை அடக்குவதும் தேவையாக இருந்திருக்கலாம். இன்று ஒட்டு மொத்தத் தமிழனும் உயர்வதற்கு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ், என்.ஐ.டி போன்ற நிறுவனங்களே தேவை. மாட்டின் கொம்புகளைவிட, இந்த ஆதிக்கத்தின் பலம் அதிகமாக இருக்கும் காலம் இது. மாடுபிடிக்கப் போராடுவதை விட்டுவிட்டு மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடைக்கப் போராடுங்கள். எதிர்காலத் தமிழன் ஏற்றமுடன் வாழ்வான்.
 
நன்றி: அதிஅசுரன்