லயோலா கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த உதவி பேராசிரியையின் கண்ணீர் பேட்டி

Webdunia|
FILE
லயோலா கல்லூரி தமிழ் துறை தலைவர் ராஜராஜன் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் பாலியல் புகார் மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்த அதே கல்லூரியின் உதவி பேராசிரியையாக பணி புரியும் ஜெயசாந்தி அவர்கள் நமது வெப்துனியாவிற்கு அளித்த கண்ணீர் பேட்டி வருமாறு...

என் பெயர் ஜோஸ்பின் ஜெயசாந்தி, நான் லயோலா கல்லூரி தமிழ் பிரிவில் உதவி பேராசிரியையாக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வருகிறேன்.

லயோலா கல்லூரி தமிழ் துறையின் தலைவராக வேலை செய்து வரும் பேராசிரியர் எஸ்.ஏ.ராஜராஜன் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தவறான (அசிங்கமான) சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தமிழ் துறையின் தலைவராக 2008 ஆம் அண்டு ஜூன் மாதம் பொருப்பேற்றார். தகாத வார்த்தைகளில் திட்டுவது, மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகள் மற்றும் அலுவலகம் என்று கூட பாராமல் பிறர் முன்னிலையில் விடுப்பு கடிதங்களை முகத்தில் வீசி எரிவது போன்ற அவரின் நடவடிக்கைகள் காரணமாக 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான் பணியிலிருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன். ஆனால் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் பல்வேறு காரணங்கள் கூறி ஏற்க மறுத்தனர். அவரின் உள்நோக்கம் என்ன என்று அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பிரச்சனை என்னவென்றால் நான் லயோலா கல்லூரியில் தமிழ் துறையில் மட்டுமல்லாமல் CIP(centre for international programmes) என்ற துறையிலும் ஈடுபாட்டுடன் பணியாற்றி வந்தேன். இந்த துறை மூலம் பனைத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பற்றி புரோஜெக்ட்டுகள் செய்து இந்திய அளவில் வெற்றியடைந்து உலக அளவில கலந்து கொள்வதற்காக மாணவர்களை அழைத்துச் செல்வது போன்று நல்ல முறையில் ஈடுபாட்டுடன் வேலை செய்து வந்தேன். இதன் பிறகு பேராசிரியர் ராஜராஜனின் தொந்தரவுகள் வெளிப்படையாகிவிட்டன. அவர் என்னை பார்த்து, "நீ கணவன் இல்லாமல் காய்ந்து போய் கிடக்கிறாய், என்னுடன் வந்துவிடு, என்னுடன் லாட்ஜில் தங்க வேண்டும்". இது போன்ற, இன்னும் அவர் என்னிடம் பேசியதையெல்லாம் வெளிப்படையாக கூற முடியாது. அந்த அளவிற்கு கேட்க விரும்பாத வார்த்தைகளை அவர் உபயோகித்து என்னிடம் பேசினார். மேலும் நாட்கள் செல்லச் செல்ல வெளிப்படையாகவே பாலியல் உறவிற்காக என்னை துன்புறுத்தவும், நச்சரிக்கவும் ஆரம்பித்தார். இது போன்ற அவரது செயல்பாடுகளை மிகவும் கடினப்பட்டு விலக்கி, சமாளித்து வந்தேன்.
பிறகு அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்த இருக்கையை அவரது அறைக்கு மாற்றி என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். இதனைக் கண்ட சக ஊழியர்கள் அவரை பற்றி என்னிடம் கூறி கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அவர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர். அவர் கல்லூரி, துறை அலுவலகம் என்று கூட பாராமல் பல விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை அடிக்கவும் முயற்சித்திருக்கிறார். அதனாலேயே அவர் ஒரு முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன்.


இதில் மேலும் படிக்கவும் :