தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: மின்வாரியத் தலைவர் திட்டவட்டம்!
தமிழகத்தில் கோடைக்கால மின் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோடைக்காலத்தின் உச்சமான 'அக்னி நட்சத்திரம்' தொடங்கி நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக, மாநிலத்தின் மின் நுகர்வு வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களிடையே எழுந்துள்ள மின்வெட்டு குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் அவர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில்,
தமிழகத்தின் கோடைக்கால அதிகபட்ச மின்சாரத் தேவை எவ்வளவு என்பதை மின்வாரியம் முன்கூட்டியே துல்லியமாகக் கணக்கிட்டுள்ளது. அதிகரித்துள்ள தேவையைச் சமாளிக்கத் தேவையான கூடுதல் மின்சாரம் வெளிச்சந்தையிலும், பிற மாநிலங்களிடமிருந்தும் முறையாகக் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதால், திட்டமிடப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு வாய்ப்பில்லை என அவர் உறுதிபடக் கூறியுள்ளார். மின் தேவை உச்சத்தைத் தொட்டாலும், அதைக் கையாளும் அளவிற்குத் தயார் நிலையில் மின்வாரியம் உள்ளது. எனவே பொதுமக்கள் மின்வெட்டு குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
.