ஜாதி பஞ்சாயத்து; கலப்பு திருமணம் செய்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்த அவலம்

Webdunia|
FILE
தருமபுரியில் காதல்- சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஒரு குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சாதி பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட தலித் பெண் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க்கிடம் மனு கொடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் பறையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சுதா ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்,வேப்பமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் இனத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி முடித்த சுரேஷ் என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். பிறகு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவர் குடும்பத்தாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு சுதிப் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. நத்தம் கிராமத்தில் சாதி வெறியர்கள் நடத்திய வன்முறை சம்பவத்திற்கு பிறகு அந்த பெண் தலித் இனத்தை சேர்ந்தவர் என்று தெரிந்து கொண்ட வேப்பமரத்தூரைச் சேர்ந்த ஊர் பிரமுகர்கள் ரங்கநாதன் என்பவர் தலைமையில் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளனர். இதனையடுத்து அந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளார்கள்.
இதோடுமட்டுமின்றி அந்த பெண்ணின் சாதி சான்றிதழை சரிபார்த்த பிறகே ஊரில் சேர்த்துக் கொள்வது என்றும் கட்டப்பஞ்சாயத்து கும்பல் முடிவு செய்துள்ளது. மேலும் ஊரில் உள்ள சிலர் அவரை இழிவு செய்து அவமானப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த தலித் பெண், இச்சம்பவம் குறித்து கடந்த ஜூன் 6 ஆம் தேதி பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளர். அங்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், மேற்க்கொண்டு அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனையடுத்து, தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், வேப்பமரத்தூர் கட்டப்பஞ்சாயத்து கும்பல் எனது கணவரையும், கணவர் குடும்பத்தையும் ஊரில் இருக்கக் கூடாது என மிரட்டி வருகிறார்கள். எனவே எனது குடும்பத்திற்கும் எனது கணவர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும். சாதி ஆதிக்க கட்டப்பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஏற்கெனவே காவல் நிலையத்தில் கொடுத்த என்னுடைய புகார் மனு மீது அரூர் டி.எஸ்.பி சம்பத் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்க முயற்சி செய்து எதிரிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :