1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (10:07 IST)

ஹெராத் சுழலில் மூழ்கியது நியூசீலாந்து! இலங்கை அரையிறுதிக்கு தகுதி!

சிட்டகாங்கில் நேற்று நடைபெற்ற மிக முக்கியாமான, காலிறுதி போன்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் ரங்கன்னா ஹெராத் சற்றும் எதிர்பாராதவிதமாக அபாரமான பந்து வீச்சை நிகழ்த்த இலங்கை அணி நியூசீலாந்தை மிகக்குறைந்த ரன்னிற்கு சுருட்டி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இலங்கை பேட்டிங் சொதப்ப அந்த அணி 119 ரன்களையே எடுத்தது. இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஓவருக்கு 6 ரன்கள் இலக்கு என்பது ஒன்றுமில்லை 9 விக்கெட்டுகளை இழந்தாலும் ஒரு அணி வெற்றி பெற்று விடும், ஆனால் இங்குதான் இந்தத் தொடரில் முதல் போட்டியில் விளையாடும் ரங்கான்னா ஹெராத் ஒரு திடுக்கிடும் பந்து வீச்சு நிகழ்த்துதலை செய்து காட்டினார். 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு இரண்டு ரன் அவுட்களுக்கும் காரணமாகி அசத்த நியூசீலாந்து 60 ரன்களுக்கு சுருண்டு மாயமானது. 

3வது ஓவர் பந்து வீச வந்த ஹெராத் அவர் முதல் ஓவரிலேயே அசத்தி விக்கெட் மைடன் ஆக்கினார். அவர் பந்தில் ரன் எடுக்கும் முன்னரே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். இவர் 3 ஓவர்களை முடித்தபோது நியூசீலாந்து பரிதாபமாக 30/5 என்று சரிந்தது. ஹெராத் 3.3 ஓவர்கள்வீசி 2 மைடன்களுடன் 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள், கிரிக்கெட் வரலாற்றில் கார்ட்னி வால்ஷ் ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக 1 ரன்னிற்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பிறகு இதுதான் அனைத்து கிரிக்கெட்டிற்குமான சாதனையாக இருக்கும் என்று கூறலாம்.
கேன் வில்லியஅம்சன் மட்டுமே எப்படி ஆடவேண்டும் என்று நேற்று கற்றுக் கொடுத்தார் அவர் அத்கபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். ஆனால் பரிதாபமாக எதிர்முனையில் படுகளம் நடந்து கொண்டிருந்ததை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

அதிரடி மன்னன், உலக சாதனை நாயகன் கோரி ஆண்டர்சன் விளையாட முடியவில்லை. கையில் அடிப்பட்டதால் அவரால் பேட்டிங் செய்ய முடியாமல் போனது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ரங்கன்னா ஹெராத்தினால் நேற்று நியூசீலாந்தின் அதிரடிப்பட்டியலில் வில்லியம்சன் தவிர ஒருவர் கூட இரட்டை இலக்கம் எட்டவில்லை.
 
முதலில் T20 பிட்சை இப்படி படுகளமாக போடுவதில் என்ன பயன் என்று தெரியவில்லை. இரு அணிகளுக்கும் நியாயமான பிட்ச் ஆக இருக்கவேண்டும், பந்துகள் சதுரமாக திரும்புவதில் யார்தான் விளையாட முடியும்?
 
முதலில் மார்டின் கப்தில் துவங்கினார். மிட் ஆனில் அடித்து சிங்கிள் எடுக்கப்பார்க்க எதிர்முனையில் வில்லியம்சன் பெசாமால் இருந்தார் ஹெராத் பந்தை எடுத்து அடித்து ரன் அவுட் செய்தார். அடுத்த 11 பந்துகளில் நியூசீலாந்தின் விதியே முடிந்து போனது.
 
ஒரு விதத்தில் நியூசீலாந்து பேட்ஸ்மென்கள் அப்ளை செய்யாமல் மனம் போன போக்கில் ஆடியதும் இத்தகைய மோசமான ஆட்டத்திற்குக் காரணமாக அமைந்தது.
மகேலா ஜெயவர்தனே கேப்டனாக செயல்பட்டது போல்தான் இருந்தது. ஸ்பின்னர்களுக்கு ஒரு ஸ்லிப், ஒரு ஷாட் லெக் தொடர்ந்து வைத்து நெருக்கடி கொடுத்தார். இது அருமையான கேப்டன்சியாகும் 119 ரன்களை வைத்துக் கொண்டு முடிவு எடுக்கவேண்டும் அங்குதான் மகேலா மார்க் எடுத்து விடுகிறார்.
 
முன்னதாக இலங்கையில் குஷால் பெரேரா வழக்கம்போல் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். மகேலா 25 ரன்கள் எடுத்தார். திரிமன்ன 20, கடைசியில் சேனநாயகே 17 ரன்கள் எடுத்தார். உண்மையில் சேனநாயகே அடித்த ஷாட்டில்தான் கோரி ஆண்டர்சன் கேட்சை விட்டு அதில் விரலில் காயமும் ஏற்பட்டு பந்தும் சிக்ஸ் ஆனது.
 
அரையிறுதியில் இலங்கை யாரைச் சந்திக்கும் என்பது இன்றைய வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் போட்டிகளிலேயே தெரியவரும்.