வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 15 ஜூலை 2015 (08:25 IST)

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.


 


 
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடந்தது.
 
3 ஆவது முறையாக டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா இந்த முறையும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
கேப்டன் ரஹானே 15 ரன்னிலும், முரளிவிஜய் 13 ரன்னிலும், மனோஜ் திவாரி 10 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
82 ரன்னுக்குள் 4 முன்னணி விக்கெட்டுகளை (21.4 ஓவர்) இழந்து இந்திய அணி. இந்நிலையில் புதுமுக வீரர் மனிஷ் பாண்டேவும், கேதர் ஜாதவும் இணைந்தனர்.
 
27.3 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை தொட்டது. அதன் பிறகு படிப்படியாக வேகத்தை கூட்டினர். 67 பந்துகளில் பாண்டே அரைசதத்தை கடந்தார்.
 
ஜாதவ் 41 ரன்களில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை எதிரணி கேப்டன் சிகும்புரா வீணடித்தார். இதனால், தனது வாய்ப்பை நழுவ விடாமல் ஜாதவ் பயன்படுத்திக் கொண்டார்.
 
இதைத் தொடர்ந்து, ஜாதவ் அதிரடி காட்டினார். பந்தை அடிக்கடி எல்லைக்கோட்டிக்கு விரட்டியடித்த அவர், டிரிபனோவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசி அசத்தினார்.
 
இதற்கிடையே புதுமுகம் மனிஷ் பாண்டே 71 ரன்களில் (86 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கினார். 
 
ஜாதவ் சதத்தை நெருங்கி கொண்டிருந்த நிலையில், 49 ஆவது ஓவரை பின்னி முழுமையாக பயன்படுத்தி அந்த ஓவரில் சிக்சர், 2 பவுண்டரி உள்பட 16 ரன்களை திரட்டினார்.
 
கடைசி ஓவரில் சதத்திற்கு ஜாதவ்க்கு 9 ரன் தேவைப்பட்டது. முதல் 4 பந்துகளில் 5 ரன் எடுத்த ஜாதவ், 5 ஆவது பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
 
இதனால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. ஜாதவ் 105 ரன்களுடனும் (87 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), பின்னி 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய வீரர்கள் 106 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த, ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் சிபாபா தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
 
இதனால், அந்த அணி 42.4 ஓவர்களில் 192 ரன்களுக்கு சுருண்டது. கடைசி 43 ரன்களுக்கு மட்டும் ஜிம்பாப்வே 7 விக்கெட்டுகளை இழந்தது.
 
இதன் மூலம் இந்தியா 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிபாபா 82 ரன்கள் (109 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார்.
 
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
 
இந்த ஆண்டில் இந்தியா வென்ற முதல் தொடர் இதுவாகும். ஜாதவ் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் அம்பத்தி ராயுடு தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
 
இந்நிலையில்,  இவ்விரு அணிகளுக்கும் இடையே இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலாவது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் வருகிற 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.