1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2016 (02:25 IST)

நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா இளம் இந்திய அணி?

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
 

 
முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் தொடங்க உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி வாகை சூடியது.
 
முக்கியமாக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடைசியாக விளையாடிய 11 போட்டிகலில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது.
 
இந்திய அணியில் ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல், அஜிங்கே ரஹானே, ரோஹித் சர்மா, முரளி விஜய், விருத்திமான சஹா என பெரிய பேட்டிங் வரிசையே உள்ளது.
 
அதேபோல, சுழற்பந்துக்கு சாதகமான இந்திய பிட்சுகளி ஜாலம் காட்ட அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். வேகப்பந்திலும் மிரட்ட உமேஷ் யாதவ், முஹமது சமி, புவனேஷ்குமார் ஆகியோரும் உள்ளனர்.
 
இந்திய அணிக்கு எந்த வகையிலும் நியூசிலாந்து அணி மோசமானது அல்ல. அந்த அணியிலும் மார்டின் கப்தில், ராஸ் டெய்லர், வில்லியம்சன், வாட்லிங், டாம் லாதம், மார்க் கிரைக், டக் பிரேஸ்வெல், ரோஞ்சி ஆகியோர் உள்ளனர்.
 
பந்து வீச்சிலும், ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, இஷ் ஷோதி, நெய்ல் வாக்னர் ஆகியோரும் ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்டனர் போன்ற ஆல்-ரவுண்டர்களும் தயாராக உள்ளனர். இதனால், இரு அணிகளும் வெற்றிபெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம். மேலும், இது இந்திய அணி விளையாடும் 500ஆவது டெஸ்ட் போட்டி என்பதால் சுவராஸ்யமாக இருக்கும்.
 
இந்தியா-நியூசிலாந்து இரண்டு அணிகளும் நேருக்கு நேர் இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் மோதின. இதில் இந்திய அணி 18 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 26 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.