வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 28 மார்ச் 2016 (15:04 IST)

விராட் கோலி விளாசல்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது.


 


மொஹாலியில் நடைபெற்ற குரூப் 2 பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் களம் இறங்கின.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். உஸ்மான் கவாஜாவும், ஆரோன் பிஞ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
 
ரன் கணக்கை தொடங்கிய கவாஜா, வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா வீசிய 2 ஆவது ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து விலாசினார்.
 
அதைத் தொடர்ந்து, அஸ்வினின் சுழல் பந்தை ஆரோன் பிஞ்ச் 2 சிக்சர் பறக்க விட்டார். அந்த ஓவரில் மொத்தம் 22 ரன்களை எடுத்தது ஆஸ்த்திரேலியா. 4 ஓவருக்குள் ஆஸ்திரேலியா 53 ரன்களை குவித்தது.
 
இதைத் தொடர்ந்து, கவாஜா 26 ரன்களில் நெஹ்ராவின் பந்து வீச்சில் டோனியிடம் கேட்ச் ஆனார்.
 
அதையடுத்து வந்த டேவிட் வார்னர் 6 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலியாவின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர்.
 
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 2 ரன் எடுத்த நிலையில், யுவராஜ்சிங் பந்து வீச்சில் டோனியிடம் கேட்ச் ஆனார்.
 
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஆரோன் பிஞ்ச் 43 ரன்களில் ஆட்டம் இழந்தார். 5 முதல் 14 ஓவர்களில் ஆஸ்திரேலியா 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
 
இதையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல்  28 பந்துகளில் 31 ரன்களை சேகரித்தார். ஆனால், பும்ரா வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார்.
 
ஆல்-ரவுண்டர் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் ஃபால்க்னரின் 10 ரன்னில் சுருண்டார். விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் கடைசி இரு பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சராக விளாசினார். இதனால், அந்த அணி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.
 
இந்நிலையில், 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் களம் இறங்கினர்.
 
ஷிகர் தவான் 13 ரன்னில் கவுல்டர்-நைலே வீசிய பந்தில் வெறினார். மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மா 12 ரன் எடுத்த நிலையில், வாட்சனின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
 
சுரேஷ் ரெய்னாவும் 10 ரன்னில் வாட்சன் ஆட்டமிழக்கச் செய்தார். 7.4 ஓவரில் 49 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
 
இந்நிலையில், விராட் கோலியும், யுவராஜ் சிங்கும் கைகோர்த்து அணியை வெற்றி பெறச் செய்யப் போராடினர்.
 
விராட் கோலியின் அற்புதமான ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மறுமுனையில் விளையாடிய யுவராஜ் சிங்கிற்கு திடீரென தசைப்பிடி ஏற்பட்டது. இதனால் அவரால் சிறப்பாக பங்காற்ற முடியாமல் போனது.
 
யுவராஜ் சிங் 21 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் தோனி களமிறங்கினார். கோலியும், டோனியும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
 
கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டடது. அப்போது, ஃபால்க்னர் வீசிய 18 ஆவது ஓவரில் கோலி 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அசத்தினார்.
 
அந்த ஓவரில் இந்தியா 19 ரன்களை எடுத்தது. அடுத்து கவுல்டர் நைல் வீசிய 19 ஆவது ஓவரில் கோலி, 4 பவுண்டரிகள் விளாசினார்.
 
இதையடுத்து கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 4 ரன்னே தேவைப்பட்டது. 20 ஆவது ஓவரை வீசிய ஃபால்க்னரின் முதல் பந்தை டோனி பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
 
இதனால், இந்திய அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
கோலி 82 ரன்களுடனும் (51 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 18 ரன்களுடனும் (10 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
 
இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றை எட்டியது. கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்திய அணி அரையிறுதியில் வருகிற 31 ஆம் தேதி வெஸ்ட் இண்டீசுடன் மோதவுள்ளது.
 
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் முன்னரே நுழைந்த விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.